புரட்சித்தலைவர் ,மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், என்று பல்வேறு அடைமொழிகளை கொண்டவர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தமிழக மக்களின் ஒவ்வொருவரின் மனதிலும் இடம் பிடித்திருந்த அவர் நம்மைவிட்டுப் பிரிந்து 34 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்து இருக்கின்றன.
ஆனால் இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்களும் அவருடைய புகழை போற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றால் மற்ற தலைவர்களிடம் இல்லாத தனித்தன்மை அவரிடம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணை இல்லாத ஒரு தலைவராக இருந்த புரட்சித்தலைவரின் தனித்தன்மைகளை இங்கே காணலாம்.
உலகின் எந்த தலைவர்களிடமும் இல்லாத ஒரு தனித்தன்மை எம்ஜிஆரிடம் இருந்தது என்றால் அது அவருடைய வள்ளல் தன்மை, கடமை இருந்தால் வீரன் ஆகலாம், கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம், பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம், இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம் என்ற அவருடைய பாடல் வரிகளுக்கு ஏற்ப அவரே வாழ்ந்து காட்டி விட்டுச் சென்றுவிட்டார்.
அவர் மறைந்து 34 ஆண்டுகள் இன்றுடன் நிறைவு பெற்று இருந்தாலும் இன்றளவும் அவர் இல்லையே என்ற வெற்றிடம் தமிழகத்தில் நீங்காமல் தான் இருக்கிறது. அவருக்குப் பின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவருடைய பணியை தொடர்ந்து செய்து வந்தாலும் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பது நிதர்சனமான உண்மை.
அவர் தமிழகத்தில் ஆட்சி புரிந்த பத்தாண்டு காலமும் ஒரு மிகச்சிறந்த அரசு நிர்வாகத்தை கொடுத்தார் என்றால் அது மிகையாகாது. அவர் ஆட்சியில் இருந்தபோது நக்சலைட்டுகள் உள்ளிட்டோருக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதோடு ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரிய வள்ளலாக திகழ்ந்தார்.
அதோடு எதிர்க்கட்சிகள் இவருடைய ஆட்சியில் இருக்கிறதா என்பதே தெரியாமல் இருந்தது, ஏனென்றால் அந்த அளவிற்கு இவருடைய ஆட்சிமுறை இருந்தது. எதிர்க்கட்சிகள் எந்தவிதமான குறைகளையும் சொல்லி விட இயலாத நிலையில் தான் இவர் அந்த பத்தாண்டு காலமும் ஆட்சி புரிந்தார் என்றால் அது மிகையாகாது.
எம்ஜிஆர் முதல் முறையாக கடந்த 1977ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற சமயத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி சட்டசபையில் உரையாற்றியபோது ஒரு விஷயத்தை குறிப்பிட்டு பேசினார்.அதாவது இந்த முதலமைச்சர் பதவி என்பது நாங்கள் சாப்பிட்டு போட்ட எச்சில் இலை என்று தெரிவித்தார், அப்போது அவை முழுவதும் அதிர்ச்சியும், அமைதியுமாக இருந்தது.
அவை முழுவதும் அமைதியாக இருந்ததை பார்த்த முதலமைச்சர் எம்ஜிஆர் உடனடியாக எழுந்து ஆம் எச்சில் இலை தான் ஆனால் நீங்கள் எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்பதை பார்ப்பதற்காக தான் நாங்கள் வந்திருக்கிறோம் என்று தெரிவித்தார். அப்போது திமுகவின் உறுப்பினர்கள் உட்பட கருணாநிதி வரையில் அனைவரும் வாயடைத்து போனார்கள். அப்படி திறமைமிக்க ஒரு தலைவர் என்றால் அது எம்ஜிஆர் மட்டும்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.
எம்ஜிஆர் அவர்களைப் போன்று தோற்றப்பொலிவும், வசீகரத் தன்மையும், இதுவரையில் யாருக்கும், எந்த ஒரு தலைவருக்கும் அமைந்ததில்லை என்பது அவருடைய தனித்தன்மை. எம்ஜிஆர் வருகிறார் என்றால் அவருடைய முகத்தை பார்ப்பதற்காக சாலையில் விடிய, விடிய பொதுமக்கள் காத்துக் கிடந்தார்கள். விளம்பரம், வாகன வசதி, உள்ளிட்ட எந்தவிதமான வசதியும் செய்து தராமலே தானாகவே எம்ஜிஆரை காண்பதற்காக மறுபடியும், மறுபடியும், பொதுமக்கள் குவியத் தொடங்கினார்கள்.
தமிழ்நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடியது எம்ஜிஆர் கூட்டங்களுக்குப் தான் என்று சொல்லப்படுகிறது. திமுகவில் கட்சி வளர்ச்சிக்காக நடத்தப்பட்ட சிறப்பு கட்டண கூட்டங்களில் எம்ஜிஆர் உரையாற்றுகிறார் என்று தெரிவித்தால் டிக்கெட்டுகள் கிடைக்காமல் பொதுமக்கள் அலைமோத தொடங்கினார்கள். தன்னெழுச்சியாக எம்ஜிஆரை காண லட்சக்கணக்கில் கூடிய பொதுமக்களின் எழுச்சி இதுவரையில் வேறு எந்த ஒரு தலைவருக்கும் கூடவில்லை என்று தெரிவிக்கிறார்கள்.
அவர் எங்கு சென்றாலும் அவருடைய காருக்கு பின்னால் அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக, ஓடி வரும் பொதுமக்களின் கூட்டத்தை பார்த்து எத்தனை மக்கள் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்? இவர்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் நினைத்து பார்ப்பாராம் எம்ஜிஆர். அதனால் தான் தனி மனித ஒழுக்கத்தையும், கட்டுப்பாடுகளையும், தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடித்து அதையே திரைப்படங்களிலும் வெளிப்படுத்தி தனக்கே உரிய இலக்கணமாக திகழ்ந்தார் எம்ஜிஆர் என்றும் சொல்லப்படுகிறது.
தன்னுடைய திரைப்படங்களின் வசனத்தின் மூலமாக மற்றும் பாடல் காட்சி அமைப்பு, உள்ளிட்ட அனைத்துமே பொதுமக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படும் விதமாக அமைய வேண்டும் என்று ஒவ்வொரு காட்சியையும் தீர்மானித்தார் எம்ஜிஆர் என்று சொல்கிறார்கள். அதன் காரணமாக தான் யார் பாடல் எழுதினாலும், யார் வசனம் எழுதினாலும், அதேபோல யார் கதை எழுதினாலும், அது ரிம்ஜிஆருடையதாகவே பொதுமக்களால் பார்க்கப்பட்டது.
தன்னுடைய திரைப்படத்தைப் பார்த்து யாரும் கேட்டு விடக் கூடாது என்ற காரணத்திற்காகவே எந்த ஒரு தீய பழக்கமும் இல்லாத நற்பண்புள்ள கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருப்பார் எம்ஜிஆர். ஒரு நாயகனுக்காக கதை, திரைக்கதை, வசனம் பாடல்கள், அமைத்து சினிமா தயாரிக்கப்பட்டது என்றால் அது உலகிலேயே எம்ஜிஆர் ஒருவருக்காக மட்டுமே இருக்கும்.
அதோடு வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? என கேள்வி எழுப்பி அந்த கேள்விக்கு அன்றும், இன்றும், என்றும், அவர் எழுப்பிய கேள்விக்கு அவரே பதிலாக திகழ்ந்து வருபவர் எம்ஜிஆர் மட்டும் தான். அதன் காரணமாக தான் அவரை இன்றளவும் பொதுமக்கள் மறக்காமல் இருக்கிறார்கள். இந்த உலகின் கடைசி மனிதன் வாழும் வரை அவருடைய புகழ் நிலைத்திருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.