எக்மோ சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்! உயிர் பிழைப்பாரா?

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டின் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்களின் உடல் நிலையானது கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .எனவே அவருக்கு எக்மோ கருவி மூலமாக நேற்று இரவிலிருந்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் காமராஜ் ,இந்த மாத தொடக்கத்தில் மன்னார்குடியில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்று அதன்பிறகு சென்னை திரும்பும் நேரத்தில், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது என சொல்லப்படுகின்றது. இதனையடுத்து ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி என்று வந்திருக்கிறது. அதன் பிறகு எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் அவர் மருத்துவ சிகிச்சையில் அந்த மருத்துவமனையிலேயே இருந்து வந்தார். இதனையடுத்து அவர் பொங்கலுக்கு முன்னதாகவே மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

இந்த சூழ்நிலையில், மறுபடியும் அமைச்சர் காமராஜ் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட காரணத்தால், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், மறுபடியும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த முறை அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட காரணத்தால் ,இன்று காலை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கான சிறப்பு ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் அமைச்சர் காமராஜ்.

நேற்றிரவு திடீரென பாதுகாப்பு அதிகப்படுத்த பட்டு போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட்டு ஒரு சில நிமிடங்களில் அமைச்சர் காமராஜர் இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அரும்பாக்கத்தில் இருக்கக்கூடிய எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆகியோர் மருத்துவர்களிடம் ஆலோசனை செய்த பின்பு எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார் அமைச்சர் காமராஜ்.

இந்தநிலையில், நேற்று இரவே முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், அமைச்சர் காமராஜ் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்பாக விசாரணை செய்திருக்கிறார்கள். எக்மோ கருவி மூலமாக தற்சமயம் காமராஜுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதால் ஆளும் கட்சியினர் பதற்றத்தில் இருந்து வருகிறார்கள்.