மாதத்திற்கு ஒரு முறை சிவராத்திரி வந்தாலும் கூட வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய அதுவும் இந்த மாசி மாதத்தில் வரக்கூடிய மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. மகா சிவராத்திரி என்பது காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவன் பக்தர்கள் மற்றும் சிவனடியார்களுக்கு இந்த மகா சிவராத்திரி அன்று நடக்கக்கூடிய நான்கு கால பூஜைகள் தான் தீபாவளியாக கொண்டாட கூடிய விழாவாக இருக்கும்.
மகா சிவராத்திரி அன்று கோவிலுக்குச் சென்று ஆறு முக்கிய காரியங்களை செய்வதன் மூலம் சிறந்த பலன்களை பெறலாம் என்று கூறப்படுகிறது. 1. சாமிக்கு உரிய அபிஷேகப் பொருட்களை தருதல்-இது நமது ஆன்மாவை தூய்மைப்படுத்தும். 2. லிங்கத்திற்கு அணிவிக்க திருநீறு, குங்குமம், சந்தனம் வழங்குதல்-இது நல்ல குணத்தையும், பண்பையும் வளர வைக்கும்.3. சாமிக்கு உரிய நெய்வேத்திய பொருட்களை தருவது-இது நமது ஆயுளை அதிகரிக்கச் செய்யும் மற்றும் நமது விருப்பங்கள் நிறைவேறும். 4. விளக்கேற்றி வைத்தல்- வறுமையை நீக்கி செல்வ கடாட்சத்தை தரும். கோவிலில் தான் விளக்கேற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது வீட்டிலேயும் சிவபெருமானை நினைத்து விளக்கேற்றிக் கொள்ளலாம்.5. பசு நெய் அல்லது எண்ணெய் தருவது-அறிவு மற்றும் ஞானம் நலன் பெறும்.6. தாம்பூலம் கொடுத்தல்-உலக இன்பங்களை தந்து திருப்தி கிடைக்க செய்யும். நம்மால் முடிந்த அளவிற்கு கோவில் பக்தர்களுக்கு தாம்பூலம் வழங்கலாம்.
மேலும் மகா சிவராத்திரி அன்று இரவில் நடக்கக்கூடிய நான்கு கால பூஜைகளில் கலந்து கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மகா சிவராத்திரி ஆனது இந்த வருடம் மார்ச் மாதம் 26 ஆம் தேதி வரவிருக்கிறது. முதல் கால பூஜை ஆனது பிரம்ம பூஜை காலம் ஆகும். இந்த பூஜையின் போது சிவபெருமானுக்கு நல்லெண்ணெய், பால், தயிர், நெய் போன்ற பொருட்களை வாங்கித் தருவது சிறப்பு வாய்ந்தது. நம்மால் இயன்ற பொருட்களை வாங்கித் தரலாம். இதனால் ஜென்ம தோஷம் விலகும்.
வில்வ இலையை வழிபாட்டிற்கு வாங்கித் தருவது மிக மிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இரண்டாம் கால பூஜை ஆனது மகாவிஷ்ணு பூஜை காலமாகும். இந்த பூஜையின் போது இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பால் போன்ற பல்வேறு பொருட்களையும் தரலாம். இவ்வாறு செய்வதன் மூலம் லட்சுமி கடாட்சமும், சகல சௌபாக்கியத்தையும் பெறலாம். மூன்றாவது கால பூஜை ஆனது மிகவும் முக்கியமான கால பூஜை ஆகும். ஏனென்றால் சிவனின் பாதி ஆன பார்வதி தேவியின் பூஜை காலமாகும். இந்த பூஜைக்கு தேன் வாங்கி தருவது மிகவும் சிறப்பு.
இந்த பூஜையினால் நமது குழந்தைகளின் படிப்பு, பெரியோர்களின் ஆரோக்கியம் மற்றும் செல்வாக்கு ஆகிய அனைத்தும் மேன்மை அடையும். நான்காம் கால பூஜை ஆனது பிரம்ம முகூர்த்தத்தில் நடக்கக்கூடிய பூஜையாகும். அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை வழிபட்ட காலம்தான் இந்த நான்காவது கால பூஜை. பால், பழம், பழச்சாறு குறிப்பாக கரும்புச்சாறு ஆகியவற்றை பூஜைக்கு வாங்கித் தரலாம். இந்த அனைத்து பூஜைகளிலும் கலந்து கொள்வதன் மூலம் நாம் சகல சௌபாக்கியங்களையும், சிவபெருமானின் அருளையும் பெறலாம்.