வைகுண்ட பரந்தாமனாகிய ஸ்ரீனிவாசர் அவரது திருமணத்திற்கு தேவையான பணத்தை குபேரரிடம் இருந்துதான் கடனாக வாங்கினார் என்பதை நம்முள் பலரும் அறிந்து இருப்போம். கடன் கொடுத்த குபேரனும் சில கட்டுப்பாடுகளை முன் வைத்த பின்னரே ஸ்ரீனிவாசருக்கு கடன் கொடுத்தார். அந்த கட்டுப்பாடுகள் என்ன என்பது தற்பொழுதும் திருப்பதியில் உள்ள வராகர் சன்னதியில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று ஸ்ரீனிவாசர் குபேரருக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதுமட்டுமன்றி அவரை காண வரும் பக்தர்களுக்கும் சில விதிமுறைகளை விதித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மக்கள் யாரும் பெருமாள் கூறிய விதிமுறைகளை கடைப்பிடிப்பது கிடையாது. அந்த விதிமுறைகளை தெரியாமலும் இருக்கின்றோம்.
கலியுக வைகுண்டமான திருப்பதி சென்றும் எனது கஷ்டங்கள் சிறிதும் குறையவில்லை, நான் வேண்டிய எதுவும் நடப்பதில்லை என கவலை கொள்பவர்கள் இந்த உலகில் நிறைய பேர் உள்ளனர். அவ்வாறு நினைப்பவர்கள் திருப்பதி செல்லும் பொழுது, தவறியும் செய்யக்கூடாத சில தவறுகள் என்னென்ன என்பது குறித்து தற்போது காண்போம்.
1.ஏழு மலை ,ஏழு கடல்களை தாண்டி தான் ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் பெருமாளே நீங்கள் என்னை காண்பதற்கு முன்பாக, வேறு ஒருவரை பார்த்து விட்டு தான் என்னை காண வரவேண்டும் என்று கூறியுள்ளார். அவர்தான் வராக மூர்த்தி. இந்த வராக பெருமானை தரிசித்து வழிபட்ட பின்னர் தான் ஏழுமலையானை காண செல்ல வேண்டும்.
திருப்பதி வெங்கடாஜலபதியின் வடக்கு ஆலயத்தில் தான், இந்த வராக மூர்த்தியின் ஆலயம் உள்ளது. எனவே இவரை முதலில் வணங்கிய பின்னர் தான் ஏழுமலையானை வணங்க செல்ல வேண்டும். மேலும் இவரை வணங்காமல் வந்தாலும் நமது திருப்பதி யாத்திரை முழுமை அடையாது என்றும் கூறப்படுகிறது.
ஏனென்றால் வேங்கடவன் இருக்கக்கூடிய திருமலை என்பது இந்த வராக பெருமானின் இடமாகும். இவருடைய இடத்தில் தான் நமது வெங்கடாஜலபதி அவர்கள் குடிகொண்டு இருக்கிறார்.
2. நமது இந்து மதத்தின்படி திருமணம் ஆகி ஒரு வருடங்கள் வரை புதுமண தம்பதிகள் மலை ஏறக்கூடாது, கடலில் கால் நினைக்க கூடாது, கும்பாபிஷேகம் பார்க்க கூடாது, தேர் வடம் பிடித்து இழுக்க கூடாது என சில விதிமுறைகள் புதுமண தம்பதிகளுக்கு இருக்கும்.
ஆனால் இன்றைய காலத்தில் புதுமண தம்பதிகள் தேன் நிலவிற்கு வருவது போல, ஒரு வருடம் ஆவதற்கு முன்பாகவே திருப்பதி ஏழுமலையானை காண சென்று விடுகின்றனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பரந்தாமன் குடிகொண்டுள்ள பூலோக வைகுண்டம் என்பதை மறந்து அங்கு செல்கின்றனர்.
இவ்வாறு புதுமண தம்பதிகள் திருமலைக்கு சென்றாலும் கூட, அங்கு தனியாக ஒரு அறை எடுத்து தங்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக திருமலையில் இல்லற வாழ்க்கையை தொடங்கக்கூடாது.
3. திருமலையில் வசிக்கும் லட்சுமி தாயிடமோ, வராகரிடமோ, ஆஞ்சநேயரிடமோ, கருடனிடமோ நாம் செல்கின்ற அவசரத்தில் காசுகளை தூக்கி எறிந்து விட்டு வரக்கூடாது. அவ்வாறு கடவுளிடம் காசுகளை தூக்கி எறிவது கடவுளை அவமானப்படுத்துவதற்கு சமம்.
திருமலையில் உள்ள தெய்வங்களிடம் ‘எங்களுக்கு தேவையான செல்வங்களை கொடு’ என்று கேட்கக்கூடிய பக்தர்களாகிய நாம், அந்த தெய்வங்களின் மீது செல்வங்களை தூக்கி எறிய கூடாது.
நமது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொடு என வேண்டிக் கொண்டு காசுகளை உண்டியல்களில் போட வேண்டுமே தவிர தூக்கி எறிய கூடாது.
இது திருப்பதியில் மட்டுமல்லாமல் எந்த கோவிலுக்கு சென்றாலும் நாம் செய்யக்கூடாத மிகப்பெரிய தவறு ஆகும்.
அதேபோன்று திருப்பதிக்கு செல்வதற்கு முன்பாக நமது இஷ்ட தெய்வத்தையோ அல்லது குலதெய்வத்தையோ வணங்கி விட்டு தான் யாத்திரையை தொடங்க வேண்டும்.
இறைவனை வணங்குவதை தவிர, வேறு எந்த நோக்கத்திற்காகவும் திருமலைக்குச் செல்லக்கூடாது. பெருமாளை வணங்கும் பொழுது பெருமானின் பாதத்திலிருந்து தான் வணங்க வேண்டும்.
இவ்வாறு பெருமானின் பாதத்திலிருந்து வணங்கி கொண்டே வரும்பொழுது பெருமாளின் நெஞ்சில் மகாலட்சுமி தாயார் இருப்பார். அவரை வணங்க மறக்கக்கூடாது. இறுதியாக தான் பெருமாளின் முகத்தை பார்த்து தரிசனம் செய்ய வேண்டும்.