தம்பி முக கவசம் இப்படித்தான் போடவேண்டும்! முக கவசம் அணியாதவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முதலமைச்சர்!

Photo of author

By Sakthi

நோய் தொற்று தாக்கம் எப்போது குறையும்? என்று எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கின்ற சமயத்தில் தற்சமயம் மீண்டும் நோய்த்தொற்று உருமாறி உலகத்தையே கதிகலங்க வைத்து வருகிறது. தமிழ் நாட்டிலும் ஒவ்வொரு நாளும் நோய் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதை நம்மால் காணமுடிகிறது. தமிழக அரசும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றது. கவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி கொண்டுதான் உள்ளது.

அதேபோல முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று கொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் தடுப்பூசி செலுத்துவது மற்றும் முக கவசம் அணிவது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பேசி வருகின்றார். நேற்று முன்தினம் சென்னையில் 15 வயது முதல் 18 வயது வரையில் உள்ள சிறுவர்களுக்கான நோய் தொற்று தடுப்பு சிறப்பு முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றும் போது கூட நோயின் தாக்கத்தை தடுக்க நமக்கு முன்னால் இருக்கக்கூடிய மிகப்பெரிய கேடயம் கவசம் தான் என்று உரையாற்றினார் இவ்வாறு முக கவசம் அணிவது தொடர்பாக தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.

இந்த சூழ்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நேற்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த பின்னர் வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அண்ணாசாலை வழியாக செல்லும் சமயத்தில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகில் இருக்கின்ற பேருந்து நிறுத்தம், ரிச்சி தெரு அருகில் காஸ்மோபாலிடன் அருகில் ஸ்பென்சர் பிளாசா எதிரில் ஆயிரம் விளக்கு பகுதி, சேப்பாக்கம், தேனாம்பேட்டை, சித்திவிநாயகர் கோவில் தெரு, எல்டாம்ஸ் சாலை சிக்னல் எஸ்ஐஇடி கல்லூரி பேருந்து நிலையம் மற்றும் அண்ணா சாலை, பெரியார் சிலை அருகில் இருக்கின்ற பகுதிகள், தபால் தலைமை அலுவலகத்திற்கு அருகில் இருக்கின்ற பேருந்து நிறுத்தம், உள்ளிட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் அலட்சியமாக இருந்த பொதுமக்களிடம் முக கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்தார்.

ஒரு சில பகுதிகளில் அவர் வாகனத்தை விட்டு கீழே இறங்கி முக கவசத்தை சரியாக அணியாமல் இருந்தவர்களைப் பார்த்து கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு உண்டாக்கினார். முக கவசம் இல்லாதவர்களுக்கு தன்னுடைய வாகனத்தில் இருந்த முழு கலசத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சிலருக்கு அவரே முகத்தில் மாட்டியும் விட்டிருக்கிறார் அவ்வாறு மக்களை சந்தித்த போது அவர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களையும், அவர் கூறியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்ததாக சொல்லப்படுகிறது.