தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் பருவ மழை தொடங்கியது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வெகுவாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். ஆனாலும் மழை பெய்யாத இடங்களில் விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில், கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் மழை பெய்து வருவதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அதோடு தமிழகத்திலும் பல அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அங்கு இருக்கக்கூடிய அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருவதால் தமிழகத்தில் காவிரி நதியில் நீர்வரத்து அதிகமாக இருக்கிறது. இதனால் திருச்சி முக்கொம்பு அணை கடல் போல காட்சி தருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும், நாளையும், சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில், தமிழக பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான நாளைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு இருக்கிறது.