அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதற்கு உண்மையான காரணம் இதுதான்! சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!

Photo of author

By Sakthi

சென்னை வேப்பேரியில் இருக்கின்ற பெரியார் திடலில் நோய்த்தொற்று சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேற்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.

அந்த சமயத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. சென்னையிலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது. சென்னையில் தேனாம்பேட்டை, வளசரவாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர், உள்ளிட்ட ஏழு மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

நோய்த்தொற்றின் இரண்டாவது அலையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பாக 79 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த மையங்களில் 27 ஆயிரத்து 808 பேர் சிகிச்சை பெற்று பயன் பெற்றிருக்கிறார்கள். தற்சமயம் மறுபடியும் நோய் பரவல் அதிகரித்திருக்கின்றன. மாநிலத்திலேயே முதல் சித்த மருத்துவர் நோய் தொற்று சிகிச்சை மையம் பெரியார் திடலில் 41 படுக்கை வசதிகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் ஆரம்பிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

புதிய வகை நோய் தொற்றும் பாதித்தவர்கள் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு லேசான அறிகுறிகளுடன் இருப்பவர்கள் வீடுகளிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பொருத்தவரையில் நோய்தொற்று பாதித்தவர்களுக்கு முதல் கட்ட பரிசோதனை செய்ய ஏதுவாக 22 பகுதிகளில் முதற்கட்ட பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் 16 மையங்கள் நேற்று முதல் செயல்பட ஆரம்பித்திருக்கின்றன. அதோடு ஒவ்வொரு மண்டலத்திலும் மருத்துவரை கொண்ட குழு அமைக்கப்பட்டு தொலைபேசி மூலமாக நோய்தொற்று பாதித்தவர்கள் உடல்நிலை தொடர்பாக கேட்டறிந்து அவர்களுக்கு உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்துவோரின் சதவீதம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த 27 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கின்றன என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அம்மா மெனி கிளினிக் ஒரு வருட காலத்திற்கு தாற்காலிக ஏற்பாடாகவே ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கும்போது சுமார் 1800 மருத்துவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டார்கள், செவிலியர்கள் யாரும் நியமனம் செய்யப்படவில்லை. இந்த திட்டத்தால் மக்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை.

தற்காலிகமாக உண்டாக்கப்பட்ட இந்த மினி கிளினிக் திட்டம் முடித்து வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் அம்மா மினி கிளினிக் பணிகளுக்கு நியமனம் செய்யப்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு மார்ச் மாதம் வரையில் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் நோய்தொற்று பணிகளில் பயன்படுத்தபடுவார்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பரந்தாமன் சட்டசபை உறுப்பினர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி, உள்பட பலர் பங்கேற்றனர் என சொல்லப்படுகிறது.