நாளை திறக்கப்படும் முதுமலை காப்பகம்! இவர்கள் வருகையை தவிர்க்க வேண்டும்!
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. பல இழப்புகள் ஏற்பட்டதும் குறிப்பிடத் தக்கது. முதல் அலையை விட இரண்டாம் அலையில் மக்கள் சொல்லொனாத் துயரில் இருந்தனர். தோற்று பாதிப்பு அவ்வளவு அதிகமாக இருந்தது என்பது நாம் அறிந்த விஷயம் தான்.
தமிழக அரசின் உத்தரவுப்படி அனைத்துமே முடங்கின. பள்ளி, கல்லூரிகள், சுற்றுலாத் தளங்கள் என அனைத்தும் மூடியதால் பொருளாதார நிலை மிகவும் மோசமானதாக இருந்தது. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகமும் ஏப்ரல் 20 ம் தேதி மூடப்பட்டு, சுற்றுலா பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் தற்போது கொரோனா கணிசமாக குறைந்து வருவதைத் தொடர்ந்து அரசின் உத்தரவுப்படி, பலவும் திறக்கப்பட்டுள்ள போதும் மிக ஜாக்கிரதையாக சூழ்நிலை கையாளப்பட்டு வருகிறது. எனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை சுற்றுலா மையம் 5 மாதங்களுக்குப் பிறகு நாளை திறக்கப்பட உள்ளது. சுற்றுலா மையத்தில் முதல் கட்டமாக வாகன சவாரி மட்டும் தொடங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் முதுமலை சுற்றுலா மையம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. வனத்துறையினர் இதுபற்றி கூறுகையில் சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி அனுமதிக்கப்படுவார்கள் என்றும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோய் பாதித்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வருகையை தவிர்க்க வேண்டுமெனவும் கூறினார்கள்.