சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் முனிஸ்வர் நாத் பண்டாரி!

Photo of author

By Sakthi

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார்.

அதே நேரம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பேனர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதற்கு பல நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் என்று பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்கள்.

அதோடு மூத்த மற்றும் விவரமறிந்த தலைமை நீதிபதியாக இருந்த ஒருவரை மேகாலயா போன்ற சிறிய மாநிலத்தின் நீதிபதியாக நியமித்ததற்கு கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், அலகாபாத் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த வருடம் நவம்பர் மாதம் பதவியேற்றுக்கொண்டார்.

அவரை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு முடிவு செய்தது. கோலிஜியம் குழுவின் இந்த பரிந்துரையை ஏற்று பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த முனிஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்தார்.

இந்த சூழ்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரியை ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி இன்று காலை 10 மணியளவில் முறைப்படி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அதோடு உயர் நீதிமன்ற நீதிபதிகள், சட்ட அமைச்சர் மற்றும் டிஜிபி உள்ளிட்ட இந்த விழாவில் பங்கேற்றதாக தெரிகிறது.