சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர் சீமான். நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதே இவரின் நோக்கம். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டிகொள்பவர் சீமான்.
அநேரம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறிவிட்டனர். ஒருபக்கம், நடிகை விஜயலட்சுமி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டும் சீமானின் மீது இருக்கிறது. ஆனால், அதற்கெல்லாம் பெரிதாக சீமான் விளக்கம் கொடுப்பது இல்லை. இவர் மீது பல அவதூறு வழக்குகளும் இருக்கிறது. அடிக்கடி நீதிமன்றமும் செல்வார்.
விஜய் கட்சி துவங்கியவுடன் அவருடன் இணைந்து செயல்படுவது போல காட்டிக்கொண்டார். ஆனால், விஜய் திராவிடத்தை ஏற்பதாக சொன்னதும் கடுப்பாகி அவரை திட்ட துவங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட துவங்கிவிட்டார்கள். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியதால் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், திமுகவை தோற்கடிக்க வேண்டும் என ஆசைப்படும் விஜய் அதிமுக கூட்டணியில் இணைவரா என்பதும் தெரியவில்லை. ஒருபக்கம் பாஜக தலைவர் அண்ணாமலையுடன் சீமான் இணக்கம் காட்டி வருகிறார். சமீபத்தில் நடந்த எஸ்.ஆர்.எம் கல்லூரி விழாவில் அண்ணாமலையுடன் சேர்ந்து சீமானும் கலந்துகொண்டார். அதோடு, நிர்மலா சீதாராமனை சீமான் ரகசியமாக சந்தித்து பேசியதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, திமுக ஆட்சியை அகற்ற நினைக்கும் சீமான் திமுகவை எதிர்க்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார் என்கிற எண்ணம் பலருக்கும் உருவாகியிருக்கிறது.
இந்நிலையில், கூட்டணி பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சீமான் ‘கூட்டணி சேர்ந்து ஆட்சியை மாற்றுவது மாற்றம் இல்லை. தீமையை தீமையை வைத்து ஒழிக்க முடியாது. நோயை நோயால் குணப்படுத்த முடியாது. மருந்தால் மட்டுமே குணப்படுத்த முடியும். அந்த மருந்து மக்களிடம்தான் இருக்கிறது. நாங்கள் ஆட்சி மாற்றத்திற்காக வரவில்லை. அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக வந்தவர்கள்’ என பதில் சொல்லியிருக்கிறார். சீமான் சொல்வதை பார்க்கும்போது 2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் எனத் தெரிகிறது.