2026 சட்டமன்ற தேர்தலை பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து சந்திக்கிறது அதிமுக. ஏற்கனவே, 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அதன்பின் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சித்ததால் கோபப்பட்ட பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
அதன்பின் பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது, டெல்லி, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது போன்ற காரணங்களால் பழனிச்சாமியின் மனநிலை மாறியது. ஒருபக்கம், விஜயுடன் கூட்டணி வைக்கலாம் என்றால் அவர் அதிக தொகுதிகள், துணை முதல்வர் பதவி கேட்பதோடு விஜயின் தலைமையில்தான் கூட்டணி என கண்டிஷன் போட்டதும் பழனிச்சாமி பாஜக பக்கம் போனார். எந்த கட்சியுடன் ‘இனிமேல் கூட்டணி இல்லை’ என சொன்னாரோ அதே கட்சியுடன் இப்போது இணைந்துவிட்டார்.
எனவே, இதை திமுக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ரெய்டை காட்டி மிரட்டும் வேலையெல்லாம் எங்களிடம் நடக்காது. அமித்ஷா இல்லை.. எத்தனை ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் பலிக்காது. 2026-லிலும் திராவிட ஆட்சிதான்’ என பேசினார் ஸ்டாலின். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பழனிச்சாமி ‘1999ம் ஆண்டில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது ஊழலை விட மதவாதம் கொடுமையானது அல்ல என கூறினார் கருணாநிதி. பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது இனித்தது, அதிமுக கூட்டணி வைத்தல் மட்டும் ஸ்டாலினுக்கு கசக்கிறதா?’ என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில்தான் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும், எடப்பாடி பழனிச்சாமியும் இன்று சந்தித்து பேசிக்கொண்ட சம்பவம் நடந்திருக்கிறது. சட்டசபையில் உள்ள அதிமுக எம்.எல்.ஏக்களின் அறையில் இந்த சந்திப்பு நடந்தது. முதலில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ ஆகியோரை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன் அதன்பின் பழனிச்சாமியிடன் தனியாக சந்தித்து பேசினார். இன்று அவையில் அதிமுக மற்று பாஜக இரு கட்சிகளும் இணைந்து பொது கவன ஈர்ப்புக்கான பிரச்சனை எழுப்புவது தொடர்பாகவும், வேறு சில விஷயங்கள் குறித்தும் இருவரும் ஆலோசனை செய்ததாக சொல்லப்படுகிறது.