தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்தவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். கடந்த சில வருடங்களாகவே இவர் தமிழக பாஜக தலைவராக சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி செய்யாத வேலையை இவரே செய்து வந்து திமுகவுக்கு டஃப் கொடுத்தார்.
திமுகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார். இதுதான் எடப்பாடி பழனிச்சாமிக்கே தலைவலியை கொடுத்தது. ஒருபக்கம், அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சித்து அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலக காரணமாக இருந்தார். இது பாஜக மேலிடத்திற்கு கோபத்தை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமைவதை அண்ணாமலை விரும்பவில்லை.
டெல்லி சென்று அமித்ஷாவை பழனிச்சாமி சந்தித்த போது ‘பழனிச்சாமி தலைமையில் கூட்டணி என்றால் நான் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என நான் ஏற்கனவே சொன்னதில் மாற்றமில்லை. மாற்றி மாற்றி நான் பேச மாட்டேன்’ என சொல்லியிருந்தார். எனவே, விரைவில் தமிழக பாஜக தலைவர் பதவி மாற்றப்படலாம் என எல்லோரும் எதிர்பார்த்தனர்.
நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தர்ராஜன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் என பலரின் பெயரும் அடிபட்டது. சில நாட்களுக்கு முன்பு நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்தார். எனவே, அவரே பாஜக தலைவராக அதிக வாய்பிருப்பதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் தேர்தலுக்காக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் வேட்பு மனு அளித்திருக்கிறார். அவரின் பெயரை அண்ணாமலை, எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட 10 பேர் பரிந்துரை செய்துள்ளனர். அதோடு, வேறு யாரும் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே, தமிழக பாஜக தலைவராகா நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.