BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கட்சிகளனைத்தும் கூட்டணி வியூகங்களை தீவிரமாக வகுத்து வரும் சமயத்தில் அதிமுக-பாஜக ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கூட்டணி உறுதி செய்யப்படுவதற்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைத்து தான் கூட்டணி அமைத்தார். அதன்படி அண்ணாமலை நீக்கப்பட்டு, புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். பதவியிலிருந்து நீக்கப்பட்ட அண்ணாமலை பாஜக நிகழ்வுகளில் தலை காட்டாமலிருந்தார்.
இவரின் பதவி பறிப்பின் போது, இவருக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்குவதற்கான ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் நயினாரின் பதவிக்கு மீண்டும் அண்ணமலையை அமர்த்துவதற்கான பேச்சுவார்த்தை பாஜக மேலிடத்தில் நடத்தப்பட்டு வருவதாக தகவல் வந்துள்ளது. ஏனென்றால் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக பதவியேற்ற பிறகு தான் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்தது. மேலும் தமிழக இளைஞர்களின் ஆதரவும் அண்ணாமலைக்கு அதிகளவில் இருந்தது. பின்னர் நயினார் புதிய மாநில தலைவராக பொறுப்பேற்றதலிருந்தே பாஜகவின் வாக்கு பழைய நிலைக்கு திரும்பி விட்டது.
இதனை கருத்தில் கொண்டு பாஜக தலைமை, சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அண்ணாமலையை மீண்டும் தலைவராக்கினால் வாக்கு வங்கியை மீண்டும் வலுவாக்க முடியும் என்று யூகித்திருக்கிறது. இது இன்னும் அற்விக்கப்படாத நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக நயினார் ஒரு கருத்தை கூறியிருக்கிறார். பாஜகவில் மூன்று ஆண்டுகள் தான் என்னுடைய பதவி காலம். அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். என்னுடைய பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை என்று கூறியுள்ளார். இவரின் இந்த கூற்று கூடிய விரைவில் இவரது பதவிக்கு மீண்டும் அண்ணாமலை வருவதற்கான சாத்தியக்கூறுகளாக பார்க்கப்படுகிறது.

