தோஷம் நீக்கும் நவபாஷாண சிலை!

Photo of author

By Sakthi

தோஷம் நீக்கும் நவபாஷாண சிலை!

Sakthi

பாஷாணம் என்பது விஷம் என்று பொருளாகும். நாவ என்ற சொல் 9 என்ற எண்ணை குறிக்கும். நவபாஷாணத்தையும் முறைப்படி கட்டுப்படுத்தி உபயோகிக்கும் தன்மை சித்தர்களிடம் இருக்கிறது.

9 வகையான பாஷாணங்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்பு இருக்கிறது. சித்தர்கள் அதில் இருக்கின்ற அணுக்களை முறைப்படி பிரித்து மறுபடியும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்று சொல்வார்கள்.

சாதிலிங்கம், மனோசிலை, காந்தம், காரம், கந்தகம், பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டி பாஷாணம் என்பதே நவபாஷாணங்கள் ஆகும்.

இந்த நவபாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் குளங்கள் இருப்பதாக சித்தர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த நவபாஷாணத்தை கட்டுதல் என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒரு விஷயமாகும் என்றும் சொல்லப்படுகிறது. நவபாஷாணத்தால் ஏற்படுத்தப்படும் தெய்வ சிலைகள் நவக்கிரகங்களின் சக்தியை பெறுவதாக நம்பிக்கை இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில், பழனி மலை முருகன் கோவில், கொடைக்கானல் அருகே இருக்கின்ற பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் மற்றும் தேவிப்பட்டினத்தில் இருக்கின்ற ஒரு கோவில் உள்ளிட்ட 3 இடங்களில் மட்டுமே நவபாஷாண சிலைகள் இருக்கின்றன. இதில் பழனி மற்றும் பூம்பாறையில் இருக்கின்ற நவபாஷாண சிலைகள் போகர் சித்தரால் ஏற்படுத்தப்பட்டதாகும்.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவத்தை கொண்டிருப்பதாகும் நவபாஷாணங்களால் உருவாக்கப்பட்ட சுவாமி சிலையை வழிபடுபவர்களுக்கு நவகிரகங்களால் உண்டாகும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவகிரகங்களை ஒன்றாக வழிபட்டதற்கான பலனை பெறலாம் என சொல்லப்படுகிறது.

இதற்காகவே பழனி மலையில் நவபாஷாண முருகர் சிலையை போகர் சித்தர் பிரதிஷ்டை செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் தீராத நோய் கூட தீர்ந்து போகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.