TVK BJP: கரூரில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு தனிநபர் ஆணையம் அமைத்து விசாரித்து வருகிறது. இதனை பலரும் விமர்சித்து வரும் நிலையில் பாஜக, ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த விசாரணையில் இது எதிர்பாராத விதமாக நடந்த இழப்புகள் இல்லையென்று பாஜக குழு கண்டறிந்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
ஏற்கனவே பாஜகவின் பிடியில் தான் விஜய் இருக்கிறார் என்று எதிர்க் கட்சிகள் கூறி வந்த நிலையில் இந்த குழு அதனை உறுதிபடுத்தியுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது பரபரப்பைக் கிளப்பியது. இவர் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்க போவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் ஆதவ் அர்ஜுனா தரப்பு அதனை மறுத்தது. இந்நிலையில் விஜய் அமித்ஷாவை சந்தித்து பேசியதாகவும் தகவல் பரவியுள்ளது. இது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, அது பற்றி எனக்கு தெரியாது, அவர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை நான் செய்யவில்லை என்றும், நான் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார்.
இவர்களின் சந்திப்பிற்கு நான் ஏற்பாடு செய்யவில்லை என்ற கருத்து, பாஜகவிலிருக்கும் வேறொருவர் ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதை அவர் மறைமுகமாக கூறியுள்ளார் என்றும் பேசப்பட்டு வருகிறது. அவரின் இந்த வாதம் அமித்ஷா-விஜய் சந்தித்ததை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.