TVK: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார கூட்டம் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் மீதும், தவெக கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதும் காவல் துறையினர் வழக்கு தொடுத்துள்ளனர்.
தமிழக அரசு தனி நபர் குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 41பேர் இழப்பிற்கு திமுக தான் காரணம் என்று சிலர் கூற, விஜய்யின் அலட்சியம் தான் காரணம் என்றும் சிலர் கூறி வருகின்றனர். லைட் ஹவுஸ் மற்றும் சந்தை திடலை பிரச்சாரம் நடத்த தவெகவினர் கேட்டிருந்த நிலையில், அதற்கு பதிலாக வேலுசாமிபுரத்தை காவல் துறையினர் பரிந்துரை செய்திருந்தனர்.
இது தற்போது பெரிய விவாதமாக நடந்து கொண்டிருக்கும் சூழலில் முப்பெரும் விழாவிற்கு முன்பாக செந்தில் பாலாஜியும் இந்த இடத்தில் கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து அதிகம் இருப்பதால் பெரும்பாலும் அரசியல் கட்சிகளின் கூட்டம் உழவர் சந்தை பகுதிலேயே நடைபெறும் என்றும், கரூரில் நடக்கவிருந்த பாமக தலைவர் அன்புமணியின் பிரசாரத்திற்கு சந்தை திடல் பகுதி ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நாங்கள் கேட்ட உழவர் சந்தை அல்லது லைட் ஹவுஸ் பகுதிகளில் அனுமதி அளித்திருந்தால், இழப்புகள் ஏற்பட்டிருக்காது என்று தவெக தரப்பினர் கூறியது குறிப்பிடத்தக்கது. இதே போல் நயினார் நாகேந்திரன் முதல்வர், துணை முதல்வர் வந்தால் மட்டும், லைட் ஹவுஸ், சந்தை திடல் பகுதியில் கூட்டம் நடக்கிறது ஆனால், விஜய்க்கு மட்டும் ஏன் இந்த இடம் மறுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.