TVK BJP: அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் அரங்கு பரபரப்பாக இயங்கி வருகிறது. தேர்தல் வியூகங்களும், கூட்டணி கணக்குகளும் முழு வீச்சில் செயல்பட தொடங்கியுள்ளன. இந்த பரபரப்பை மேலும் மெருகேற்றும் வகையில், விஜய் கட்சி துவங்கியுள்ளார். தவெக கட்சி துவங்கிய நாள் முதல் இன்று வரை விஜய் உடனான கூட்டணிக்கு திராவிட கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை போட்டி போட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் விஜய் தனது கூட்டணி முடிவை ஜனவரியில் தான் அறிவிப்பேன் என்று உறுதியாக உள்ளார். ஆனாலும் இப்போதிலிருந்தே அதிமுகவும், பாஜகவும் விஜய் கூட்டணிக்கு மன்றாடி வருகிறது.
பாஜக உடன் கூட்டணி இல்லையென்பதை விஜய் உறுதியாக கூறியதிலிருந்தே பாஜகவை சேர்ந்தவர்கள் அவரை நேரடியாக விமர்சிக்க தொடங்கி விட்டனர். கரூர் சம்பவத்தில் விஜய்யின் குரலாக ஒலித்தவர்கள் தற்போது விஜய் மீது இவ்வளவு வன்மத்தை கக்குவது அரசியல் வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலை மேலும் வலுப்பெற்று விஜய்யின் தவெக ஒரு கட்சியே இல்லையென்பது போன்ற ஒரு கருத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். விஜய் உடனான கூட்டணி குறித்து அவர் பேசிய போது, ஒரு பொதுத் தேர்தலை கூட சந்திக்காதவர்களுடன், ஒரு வார்டு கவுன்சிலர் கூட இல்லாதவர்களுடன் பாஜக-அதிமுக கூட்டணி அமைக்கும் என்பது போன்ற பெரிய வார்த்தைகளை பேசலாமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இவற்றின் இந்த கூற்று தமிழக வெற்றிக் கழகம் ஒரு கட்சியே இல்லை என்பது போன்ற சிந்தனையை வரவழைக்கிறது என்றும், தவெகவை பாஜக எந்த இடத்தில் வைத்திருக்கிறது என்பதையும் நிரூபிக்கிறது என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், பாஜகவை விஜய் கொள்கை எதிரி என்று கூறி கடுமையாக எதிர்த்து வரும் சூழலில், நயினாரின் இந்த பேச்சு விஜய்க்கு மேலும் ஆத்திரத்தை கூட்டியுள்ளது என்று தவெகவை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர்.

