
ADMK BJP: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜை நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மூவரும் ஒரே மேடையில் தோன்றிய நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகால பிரிவுக்கு பிறகு இவர்கள் மூவரும் ஒன்றாக காட்சியளித்தது, அதிமுகவில் புதிய அரசியல் மாற்றத்திற்கான சைகையாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் இது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் மூவரும் சேர்ந்து பசும்பொன் சென்றது அவர்களுடைய முடிவு. இது யாருக்கு பலமோ, யாருக்கு பலவீனமோ என்பதை அவர்கள் விடும் அறிக்கையைப் பொறுத்துதான் தெரியும். தற்போதைக்கு இது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதிமுகவை பொறுத்தவரை அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை என்று அவர் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக வலுவாக செயல்பட்டாலும், கட்சியின் முன்னாள் தலைவர்கள் மீண்டும் இணைவார்களா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது. இந்த சமயத்தில், நயினார் நாகேந்திரனின் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற கூற்று, இவர்கள் மூவரையும் கட்சியில் சேர்க்கவே கூடாது என்று முடிவாக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு எதிராக உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த கூட்டு நிகழ்வு எதிர்கால அதிமுக அரசியலில் புதிய சமநிலையை உருவாக்குமா என்பது வரவிருக்கும் நாட்களில் தெளிவாகும்.
