அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜிடேஸ் குருசாமி! சதம் அடித்ததால் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி!!
நேற்று அதாவது ஜூன் 16ம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் கோவை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி சதம் அடித்து 60 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்ததால் நெல்லை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் அடித்தது. அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் அரைசதம் அடித்து 52 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்தார். சுரேஷ் குமார் 33 ரன்களும், ராம் அரவிந்த் 18 ரன்களும், சாரூக்கான் 17 ரன்களும், முகிலேஷ் 15 ரன்களும் சேர்த்தனர். நெல்லை அணியில் பந்துவீச்சில் சிறப்பாக பந்துவீசிய பொய்யாமொழி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சோனு யாதவ் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
இதையடுத்து 182 ரன்களை இலக்காகக் கொண்டு நெல்லை அணி பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். தொடக்கவீரர் அருண் கார்த்திக் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளிக்க மறுபுறம் மற்றொரு தொடக்கவீரர் நிரஞ்சனுடன் சேர்ந்து விளையாடிய அஜிடேஸ் குருசாமி அதிரடியாக விளையாட தொடங்கினார். நிரஞ்சன் 25 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய அஜிடேஸ் சர்மா சதம் அடித்து 118 ரன்கள் விளாசினார். பின்னர் களமிறங்கிய சோனு யாதவ் 20 ரன்கள் சேர்க்க நெல்லை அணி 182 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லைகா கோவை கிங்ஸ் அணியில் பந்துவீச்சில் கே கௌதம் தாமரை கண்ணன், கிரண் ஆகாஷ், ஷாரூக் கான், ஜதவெத் சுப்ரமணியன், எம் மொகம்மது ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். சிறப்பாக விளையாடி சதம் அடித்து நெல்லை அணியின் வெற்றிக்கு உதவிய அஜிடேஸ் குருசாமி ஆட்டநாயகன் விருதை வென்றார்.