9 பந்துகளில் அரைசதம் அடித்த நேபாள் வீரர்!!! யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, டேவிட் மில்லர் ஆகியோர் சாதனை ஒரே போட்டியில் முறியடிப்பு!!!
ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டில் இன்று(செப்டம்பர்27) நடைபெற்ற மங்கோலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நேபாளம் கிரிக்கெட் அணியை சேர்ந்த வீரர் 9 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் அதிவேக சதம் அடித்து அந்த அணியின் மற்றொரு வீரர் சாதனை படைத்துள்ளார்.
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டில் நேபாளம் கிரிக்கெட் அணியும் மங்கோலியா கிரிக்கெட் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற மங்கோலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து நேபாளம் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்கள் குஷால் புர்டல் 19 ரன்களுக்கும், ஆசிப் ஷேக் 16 ரன்களுக்கும் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தனர். அதன் பிறகு களமிறங்கிய குஷால் மல்லா அவர்கள் அதிரடியாக விளையாடத் தொடங்கினார். அவருடன் ஜோடி சேர்ந்த ரோஹித் பவுடெல் அவர்களும் அதிரடியாக விளையாடினார்.
நேபாள் அணியின் குஷால் மல்லா(137ரன்கள்), ரோஹித் பவுடெல்(61ரன்கள்), திபெந்திர சிங்(52ரன்கள்) ஆகியோர் தொடர்ந்து அதிரடியாக விளையாட நேபாளம் 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 315 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மங்கோலியா அணி 41 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
நேபாள் அணியில் தவாசுரேன் ஜம்யன்சுரேன் என்ற வீரர் 10 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். நேபாள் அணியில் அபினாஸ் போஹ்ரா, சந்தீப் லமிச்சானே, கரண் கே.சி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து நேபாள் அணி 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சதம் அடித்த குஷால் மல்லா அவர்கள் 34 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் குஷால் மல்லா அவர்கள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் ஆகியோரின் சாதனையை இவர் முறியடித்து உள்ளார். இதற்கு முன்னர் குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர்களின் பட்டியலில் 35 பந்துகளில் சதம் அடித்து டேவிட் மில்லர் மற்றும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் இருந்தனர். தற்பொழுது நேபாள் வீரர் குஷால் மல்லா அவர்கள் 34 பந்துகளில் சதம் அடித்து அவர்களின் சாதனையை முறியடித்துள்ளார்.
மேலும் இந்த போட்டியில் வெறும் 9 பந்துகளில் அரைசதம் அடித்து நேபாள் அணியின் திபெந்திர சிங் அவர்கள் சர்வதேச டி20 போட்டியில் யுவராஜ் சிங் செய்த சாதனையை முறியடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 2007ம் ஆண்டில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணியின் யுவராஜ் சிங் அவர்கள் ஒரே ஓவரில் 6 சிக்சர்ஸ் அடித்து 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே இதுவரை குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்தது என்று சாதனையாக இருந்தது.
தற்பொழுது இன்று(செப்டம்பர்27) நடைபெற்ற போட்டியில் 8 சிக்சர்கள் அடித்து 9 பந்துகளில் அரைசதம் அடித்து நேபாள் அணி வீரர் திபெந்திர சிங் அவர்கள் யுவராஜ் சிங் அவர்களின் சாதனையை முறியடித்துள்ளார்.
மேலும் சர்வதேச அளவிலான டி20 கிரிக்கெட் போட்டியில் இதுவரை அயர்லாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி குவித்த 278 ரன்கள்தான் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன்கள் இருந்தது. தற்பொழுது நேபாள அணி அந்த சாதனையை முறியடித்து டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 300 ரன்களை கடந்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது.