மறக்காது நெஞ்சம்!! அறிவு இருக்காடா கொஞ்சம்!!? அதிருப்தியுடன் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!!! 

மறக்காது நெஞ்சம்!! அறிவு இருக்காடா கொஞ்சம்!!? அதிருப்தியுடன் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!!!

நேற்று(செப்டம்பர்10) சென்னையில் நடைபெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசை கச்சேரியில் கலந்து கொள்ள வந்த ரசிகர்கள் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இசைப்புயல் என்று அழைக்கப்படும் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் நடத்தும் இசை நிகழ்ச்சியான “மறக்குமா நெஞ்சம்” நிகழ்ச்சி ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள ஆதித்யராம் பேலஸில் நடக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. மழை காரணமாக “மறக்குமா நெஞ்சம்” நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி செப்டம்பர் 10ம் தேதி “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது.

அதன்படி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் நடத்தும் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி சென்னையில் பனையூர் அருகே நடைபெற்றது. இந்த மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்காக வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என்ற வகையில் 2000 முதல் 15000 வரை விலை மதிப்பு கொண்ட டிக்கெட்டுகளை வாங்கி இசை நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்றனர்.

ஆனால் இசை நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு சென்ற பிறகு வாகனங்களை நிறுத்துவதற்கு சரியான பார்க்கிங் வசதி கூட இல்லாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட ரசிகர்கள் பல மணி நேரம் காத்திருப்பிற்கு பிறகே இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு உள்ளே சென்றனர்.

இசை நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு உள்ளேயும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது என்ன என்றால் 5000 ரூபாய் மதிப்பு கொண்ட டிக்கெட்டுகளை வைத்திருந்த நூற்றுக் கணக்கான ரசிகர்களுக்கு இருக்கைகள் கிடைக்கவில்லை. மேலும் கூட்டத்தில் சிக்கி பலரும் வெளியே வரமுடியாத அளவிற்கு திணறினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பற்றி ஆவேசமாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதனபடி ரசிகர் டிராபிக், டிக்கெட் இருந்தும் இருக்கைகள் கிடைக்கவில்லை, மோசமான அனுபவம் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதையடுத்து மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர் ஒருவர் “மறக்காது நெஞ்சம் அறிவு இருக்காடா கொஞ்சம்? 28000 ரூபாய் வீண் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரில் பெரிய ஊழல் நடந்துள்ளது. இசை நிகழ்ச்சிகளில் மோசமான நிகழ்ச்சி இது. நாங்கள் உயிருடன் அந்த இடத்தை விட்டு வெளியே வந்ததற்கு கடவுளுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.