விமான பயணத்திற்கு மத்திய அரசு வெளியிட்ட புதிய விதிமுறைகள்

Photo of author

By Ammasi Manickam

விமான பயணத்திற்கு மத்திய அரசு வெளியிட்ட புதிய விதிமுறைகள்

Ammasi Manickam

New Guidelines for Domestic Flight Passengers

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல், நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து பேருந்து, ரெயில் மற்றும் விமானம் உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பல கட்டங்களாக இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் சமீபகாலமாக இந்த ஊரடங்கில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து வெளிமாநிலங்களில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து அந்தந்த மாநில அரசுகள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காகக் கடந்த 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் அடுத்தக்கட்டமாக வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களுக்கு இடையே பயணிகள் ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் 4 வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 31 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. தற்போது வரை விமான போக்குவரத்தை பொறுத்தமட்டில், வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகள் விமான சேவை என இரண்டும் முற்றிலும் நிறுத்தபட்டுள்ளது. இந்நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் மூலமாக வெளிநாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக மட்டும் சில விமானங்கள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போலவே மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு செல்லவும் சில விமானங்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் தற்போதுள்ள ஊரடங்கு முடிவடைந்த பிறகு தான் விமான போக்குவரத்து வழக்கம் போல தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில் உள்நாட்டு விமான போக்குவரத்து அதற்கு முன்பே, அதாவது வருகிற 25 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய அரசு நேற்று அறிவிப்பை வெளியிட்டது. 
இந்த நிலையில், தற்போதுள்ள ஊரடங்கு காலத்தில் இயக்கப்படும் விமானங்களில் பயணம் செய்பவர்களுக்காக புதிய விதிமுறைகளை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது. 

இந்த விதிமுறையின் படி உடல் வெப்ப நிலையை அளவிடும் கருவியான தெர்மல் ஸ்கிரீனிங் பகுதி வழியாக தான் விமான நிலையத்திற்குள் பயணிகள் செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை தவிர மற்ற அனைவரும் கட்டாயமாக ஆரோக்கிய சேது செயலியை மொபைலில் நிறுவியிருக்க வேண்டும். மேலும் விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக பயணிகள் 2 மணி நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையத்திற்கு வரவேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.