DMK: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக கூட்டணிக்குள் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, இந்த முறை கூடுதல் தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் பெறுவோம் அதோடு சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தப்படும் என்று கூறியிருப்பது பெரும் விவாதமாகியுள்ளது.
இதன் மூலம் காங்கிரஸ் தனது வலிமையை கூட்டணிக்குள் நிலைப்படுத்த முயல்கிறது எனவும், திமுக தலைமையை நோக்கி அழுத்தம் கொடுக்கிறது எனவும் சொல்லப்படுகிறது. அதிமுக போல் இல்லாமல் திமுக தனது கூட்டணியில் பிளவு ஏற்படாமல் அவர்களின் கோரிக்கைக்கு இணங்கி செல்கிறது என்று கூறப்பட்ட தருணத்தில் கே.எஸ். அழகிரியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், கம்யூனிஸ்ட் கட்சியும் அதேபோன்று கூடுதல் தொகுதிகளை கோரியுள்ளன. ஏற்கனவே விசிகவின் தலைவர் திருமாவளவன் திமுகவின் கூட்டணியில் எங்களுக்கு 2 சீட்டுக்கள் மட்டுமே ஒதுக்கபட்டிருப்பதாக கூறி விவாதத்தை கிளப்பியிருந்தார். எதிர் கட்சிகள் திமுக தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது, அதனால் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என விமர்சித்து வருகின்றனர்.
சிறிய கட்சிகளின் வாக்கு வங்கியை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தில், திமுக உள்ளதால் அடுத்த நடைபெறும் கலந்துரையாடலில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவே, சட்டமன்ற தேர்தலில் திமுகவின் நிலையையும், கூட்டணியின் வலிமையையும் தீர்மானிக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது.