
DMK: ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முடிந்ததும் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். தி.மு.க வின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக மின்சாரத் துறையிடம் மக்கள் முன் வைத்தனர். ஒவ்வொரு வீட்டிற்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
கட்டணம் செலுத்திய பிறகே இணைப்பு வழங்கப்படும். தற்போது 2 மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு வசூலிக்கப்படுவதால் மொத்த பயன்பாடு அதிகரிக்கிறது. மின் கட்டணமும் உயர்கிறது. இதனை ஒரு மாதத்திற்கு குறைத்தால் சிறிய தொகையை மாதந்தோறும் செலுத்த முடியும். இதனால் மக்களுக்கு ஒரு முறை அதிக பணம் செலுத்த வேண்டிய நிலை குறையும். ஸ்மார்ட் மீட்டர் மூலம் உண்மையான பயன்பாடு மட்டுமே கணக்கிடப்படும்.
கணக்கெடுப்பு தவறுகள் குறையும். இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் “ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முடிந்தவுடன், அதற்கேற்ப புதிய வசூல் முறை தொடங்கப்படும். முதலில் சில பகுதிகளில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தி , பின்னர் முழு மாநிலத்திற்கும் விரிவாக்கப்படும்” என்று விளக்கம் அளித்துள்ளார். ஸ்மார்ட் மீட்டர் அமைக்கப்படும் பட்சத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்துவது மக்களுக்கு எளிமையாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.ஆனால் சிலர் இரண்டு மாத கட்டணத்தை மாத மாதம் பிரித்து கொடுப்பதில் சிறப்பு ஏதுமில்லை; அதே தொகை தான் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.