ADMK TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற கட்சிகளனைத்தும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் எப்போதும் அதிமுக-திமுக என இருந்த தேர்தல் களம், தற்போது அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு முனை போட்டியை எதிர்கொள்ள போகிறது. விஜய் கட்சி தொடங்கியதிலிருந்தே திமுகவை அரசியல் எதிரி என்று கூறி, அதனை வீழ்த்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால் திமுகவை எதிர்க்கும் அளவிற்கு தவெகவிற்கு அரசியல் அனுபவம் இல்லை என்ற வாதம் வலுப்பெற தொடங்கியது.
இதனை முறியடிக்கும் வகையில் 50 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் வாய்ந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். தவெகவில் இணைந்த கையுடன், இன்னும் சில அதிமுக தலைவர்கள் தவெகவில் இணைய போகிறார்கள் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். இதற்கான வேளைகளில் ஈடுபட்டுள்ள செங்கோட்டையன் அடுத்த கட்டமாக அதிமுக தொண்டர்களையும் தவெக பக்கம் சேர்ப்பதற்கான முயற்ச்சியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. இவரின் செயல்பாடுகளும் அதனையே பிரதிபலிக்கிறது.
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தனது எக்ஸ் தளபக்கத்தில் செங்கோட்டையன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து போஸ்டரில், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய், புஸ்ஸி ஆனந்த படங்களுடன் தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. இவரின் இந்த போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முன் விஜய் கட்சியில் சேரும் போது கூட அவரது சட்டை பையில் ஜெயலலிதா புகைப்படத்தை வைத்திருந்தார். இவரின் இந்த செயல்பாடுகள் அனைத்தும் அதிமுக தொண்டர்களை தவெக பக்கம் இழுக்கிறார் என்ற கருத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது.

