ADMK DMK: பீகாரை தொடர்ந்து தமிழகத்திலும் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், மாநில கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. திமுக இந்த முறையும் ஆட்சி கட்டிலில் அமர வேண்டுமென்று தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில், அதிமுகவும் அதற்கு இணையாக போராடி வருகிறது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அதிமுகவின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கை இப்போது இல்லையென்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுவது, அதிமுக பல அணிகளாக பிரிந்து இருப்பது மற்றும் இபிஎஸ்யின் தலைமை வெறி என்று பலரும் கூறுகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவிலிருந்து பிரிந்து நால்வர் அணியாக உருவானவர்கள் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இவர்கள் விஜய்யுடன் கூட்டணி அமைப்பார்கள் என்ற செய்தி பரவி வரும் வேலையில், ஓபிஎஸ்யின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக திமுக பக்கம் சாய்ந்து வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மருது அழகுராஜ், அன்வர் ராஜா, மனோஜ் பாண்டியன் போன்றோர் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது புதிதாக, ஓபிஎஸ் அணியின் விருதுநகர் மாவட்ட செயலாளராக இருந்த எஸ்.எஸ் கதிரவன் நேற்று திமுகவில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக திமுக பக்கம் செல்வதால் கூடிய விரைவில் ஓபிஎஸ்யும் திமுக பக்கம் செல்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இதற்கு முன் ஓபிஎஸ் ஒரு முறை அவரது மகனுடன் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியது, மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பிய போது எல்லாம் நன்மைக்கே என்று பதிலளித்தது போன்றவை இதற்கு உதாரணங்களாக பார்க்கப்படுகிறது. மேலும் இவரின் மூலம் நால்வர் அணியும் திமுகவில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று பலரும் கூறுகின்றனர்.

