
TVK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒன்றரை வயதையே எட்டியுள்ள நிலையில், இந்த கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக விஜய் அறிவித்துள்ளார். விஜய் தனது முதல் மாநாட்டிலேயே திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என்று அறிவித்துவிட்டார். இதனால் இந்த இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது முடிவானது. ஆனால் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவெகவை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது.
கொள்கை எதிரி என்று கூறிய கட்சியுடன் கூட்டணி அமைத்தால் அது தனது அரசியல் எதிர் காலத்திற்கு பாதகமாக அமையும் என்று விஜய் யோசித்தார். மேலும் நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று விஜய் கூறியதால் அதிமுக உடன் கூட்டணி அமைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் தவெகவின் கொள்கைக்கும், முதல்வர் வேட்பாளர் என்ற முடிவுக்கும் காங்கிரஸ் கட்சி தான் சரியாக இருக்கும் என விஜய் நினைத்தார். எனவே காங்கிரஸ்-தவெக கூட்டணி அமைக்கப்படும் என்று வியூகம் எழுந்தது.
ஆனால் காங்கிரஸ் அமைத்த ஐவர் குழு நேற்று திமுக தலைமையை நேரில் சந்தித்து, திமுக-காங்கிரஸ் கூட்டணியை உறுதிப்படுத்தியது.தவெக உடன் இதுவரை எந்த கூட்டணியும் உறுதியாகாத நிலையில், காங்கிரஸ் இருக்கும் தைரியத்தில் இருந்த விஜய்க்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் பதவியிலிருந்து இறங்கி வர விஜய் மனம் மறுக்கும் சூழலில், காங்கிரஸும் கைவிரித்ததால், தவெக இந்த தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தவெகவை சேர்ந்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.
