ஓய்வு பெற்றாலும் யாருக்கும் வயது ஆகவில்லை! பேட்டிங்கில் தூள் கிளப்பிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்

0
263
No one gets old even after retirement! Indian cricketers who stirred dust in batting
No one gets old even after retirement! Indian cricketers who stirred dust in batting

ஓய்வு பெற்றாலும் யாருக்கும் வயது ஆகவில்லை! பேட்டிங்கில் தூள் கிளப்பிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்

தற்பொழுது நடைபெற்று வரும் இந்த ஆண்டுக்கான வேர்ல்ட் சேம்பியன்ஷிப் ஆப் லெஜன்ட் கிரிக்கெட் லீக்கில் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய சாம்பியன்ஸ் அணிக்கு எதிராக இந்திய சாம்பியன்ஸ் அணி அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நார்த்தம்டன் நகரத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய சாம்பியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய இந்திய லெஜன்ட்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது.

தொடக்கத்தில் அம்பத்தி ராயுடு மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளிக்க மற்றொரு தொடக்க வீரர் ராபின் உத்தப்பா அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த யுவராஜ் சிங் தன்னுடைய பழைய அதிரடியான ஆட்டத்தை ஆடி ரன்களை குவித்தார்.

35 பந்துகளில் அரைசதம் அடித்து 65 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் உத்தப்பா ஆட்டமிழந்தார். அதன் பின்னர் யுவராஜ் சிங் அவர்கள் 28 பந்துகளில் அரைசதம் அடித்து 58 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழக்க சகோதரர்களான இர்பான் பதான் மற்றும் யூசப் பதான் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

அதிரடி காட்டிய யூசப் பதான் 23 பந்துகளில் அரைசதம் அடித்து 51 ரன்களையும் இர்பான் பதான் 19 பந்துகளில் அரைசதம் அடித்து 50 ரன்களையும் சேர்த்தனர். இதனால் இந்திய லெஜன்ட் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலிய அணியில் சிட்டில் 4 விக்கெட்டுகளையும், கூல்டர்நைல், டொஹெர்டி தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

255 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய லெஜன்ட் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 90 ரன்களுக்கு 6 முக்கியமான விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன் பின்னர் டிம் பெய்னுடன் இணைந்த கூல்டர்நைல் மெதுவாக ரன் சேர்க்கத் தொடங்கினார். 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கூல்டர்நைல் நைல் ஆட்டமிழந்தார். இறுதி வரை தனியாக போராடிய டிம் பெய்ன் 44 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்கள் மட்டுமே சேர்த்ததால் ஆஸ்திரேலிய சாம்பியன்ஸ் அணியில் 20 ஓவர்களில் 168 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இதனால் இந்திய சாம்பியன்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று வேர்ல்ட் சேம்பியன்ஷிப் லெஜன்ட்ஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கின்றது. அதிரடியாக ரன் விளையாடி 59 ரன்கள் சேர்த்த யுவராஜ் சிங் அவர்களுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இன்று(ஜூலை13) இரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய சாம்பியன்ஸ் அணி பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை எதிர்கொள்கின்றது.