பிணையக்கைதிகளாக யாரும் பிடித்து வைக்கப்படவில்லை! ரஷ்யாவின் கூற்றுக்கு பதில் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை!

Photo of author

By Sakthi

ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே மிகவும் கடுமையான போர் நிகழ்ந்து வருகிறது.இதனால் அந்த நாடு கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்ய படை கைப்பற்றி விட்டது.இதற்கிடையே போரை நிறுத்துமாறு ஐநா சபை உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு ஆலோசனை வழங்கி வந்தார்கள். ஆனாலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், உக்ரைன் வாழ் இந்தியர்களை மீட்பதற்காக ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் இந்தியாவிலிருந்து உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விமானங்கள் அனுப்பப்பட்டு அண்டை நாடுகளின் உதவியுடன் உக்ரைனிலிருக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் உட்பட அனைவரும் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், ரஷ்ய படையின் தாக்குதல் காரணமாக, பாதிக்கப்பட்ட உக்ரைனில் இந்திய மாணவர்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக தங்களுக்கு எந்த விதமான தகவலும் வரவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

பிணையக் கைதியாக இந்தியர்கள் பிடித்து வைக்கப்படவில்லை என்றாலும் கூட உக்ரைனிலிருந்து வெளியேற நினைத்து தொடர் வண்டிகளில் ஏற முயற்சிக்கும் இந்தியர்களை உக்ரைன் நாட்டு ராணுவம் தடுப்பதாக பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆகவே இதில் இந்திய வெளியுறவுத்துறை உடனடியாக தலையிட்டு தூதரகம் மூலமாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அங்கிருக்கக்கூடிய இந்திய மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருப்பதாவது, மாணவர்கள் பிணைய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக எந்தவிதமான தகவலும் எங்களுக்கு வரவில்லை மற்றும் போர் நடக்கும் பகுதிகளிலிருந்து உக்ரைனின் மேற்குப் பகுதிக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல சிறப்பு தொடர் வண்டிகள் ஏற்பாடு செய்ததில் உக்ரைன் அதிகாரிகள் ஆதரவை நாங்கள் கேட்டிருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

உக்ரைனிலுள்ள எங்களுடைய தூதரகம் உக்ரைனிலுள்ள இந்திய மக்களுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்து வருகிறது. உக்ரைன் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பல மாணவர்கள் நேற்று உக்ரைனை விட்டு வெளியேறியிருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் உக்ரைனிலிருக்கும் மாணவர்கள் தெரிவித்திருப்பதாவது உக்ரைன் ராணுவம் உக்ரைனிலிருந்து வெளியேறும் இந்தியர்களை துன்புறுத்தி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்கள்.

ஆனாலும் இதனை இந்திய வெளியுறவுத்துறை பெரிதாக கருதவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே மத்திய அரசு இதனை உடனடியாக கருத்தில் கொண்டு இந்திய தூதரகம் மூலமாக உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களையும், இந்திய மாணவர்களையும், மீட்டு வர வேண்டும் என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது.