ADMK DMK: நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தங்களுடைய ஈடுபாட்டை முழுமையாக செலுத்தி வருகின்றன. கூட்டணி வியூகங்களும், மக்களை சந்திக்கும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுகவிலிருந்து பிரிந்த முக்கிய தலைவர்களான ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன், சசிகலா போன்றோர் ஒரு அணியாக உருவாகியுள்ளனர். துரோகத்தை வீழ்த்துவோம், அம்மா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்றும் கூறியுள்ளனர்.
இந்த நிகழ்வில் இவர்களின் ஆதரவாளர்களுக்கே விருப்பமில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ஓபிஎஸ், தினகரன், போன்றோர் அணியிலிருந்து பலரும் விலகி, அதிமுக, திமுக, தவெக போன்ற பல கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஓபிஎஸ் ஆதரவளரான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளார். இவர் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார்.
இவரின் இந்த விலகலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, ஓபிஎஸ் நால்வர் அணியில் இணைந்ததால் மனோஜ் பாண்டியனுக்கான ஆதரவு குறைந்து வருவதை அவர் உணர்ந்துள்ளார். மேலும், இந்த கூட்டணி அமைக்கபடுவதற்கு முன்பு மனோஜ் பாண்டியனின் கருத்தை ஒரு முறை கூட ஓபிஎஸ் கேட்கவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். மனோஜ் பாண்டியனின் தந்தை பி.ஹெச்.பாண்டியன் எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவில் பணியாற்றி வருகிறார். அந்த வரிசையில் வந்த இவர், முதலில் அதிமுகவிலிருந்து விலகி, ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது அந்த அணியிலிருந்தும் விலகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

