NTK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால், தேர்தல் களமும், கட்சிகளும் தீவிர செயல்பாட்டில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் கூட்டணி வியூகங்கள், தொகுதி பங்கீடு என முதன்மை கட்சிகள் பேச ஆரம்பித்து விட்டன. அதிமுக, திமுகவை மட்டுமே பார்த்து வந்த அரசியல் அரங்கு தற்போது தவெக, நாதகவையும் எதிர்கொள்ளபோகிறது. தற்சமயம், எல்லா கட்சிகளும் கூட்டணியை மட்டுமே நம்பி தேர்தலை சந்தித்து வரும் சமயத்தில் நாதக மட்டும், தனித்து போட்டியிடும் முடிவை மாற்றி கொள்ளவில்லை.
இந்நிலையில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, நாதகவிலிருந்து வெளியேறிய காளியம்மாள், அரசியலிலிருந்து சற்று விலகியே இருந்தார். இவர் நாதகவிலும் சரி, அரசியலிலும் சரி முக்கியத்துவம் வாய்ந்த நபர் என்பதால் இவரின் அடுத்த கட்ட நடவடிக்கையை பற்றி விவாதங்கள் எழுந்தது. இவ்வாறான நிலையில் தான் இவர் தனிக்கட்சி தொடங்க போவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்து பேசிய காளியம்மாள், இந்த சட்டமன்ற தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிடுவேன் என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.
மேலும் புதிய கட்சி ஆரம்பிப்பதா? அல்லது வேறு கட்சியில் இணைவதா என்பதை குறித்த முடிவை விரைவில் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து தனிக்கட்சி துவங்குவதற்க்கான அடித்தளத்தை அமைத்துள்ளது என்று பலரும் கூறுகின்றனர். காளியம்மாள் சீமானுடன் ஏற்பட்ட சில முரண்பாடுகள் காரணமாகவே அக்கட்சியை விட்டு விலகினார். இதனால் இவர் புதிய கட்சி ஆரம்பிப்பது, நாதகவின் வாக்கு வங்கியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், சீமானுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.

