இவர்களை சிறையில் தள்ளுங்கள்! நீதிபதிகள் காட்டம்!

0
130

சென்னை திருவொற்றியூரில் ஏ.ஹெச்.எம் டிரேடர்ஸ் மற்றும் முகமது அலி & கோ உள்ளிட்ட இரண்டு நிறுவனங்கள் பழைய பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனங்கள் அமைந்திருக்கின்ற பகுதி அரசின் நிலம் என்ற காரணத்தால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்திருந்தது.

சென்னை மாநகராட்சியின் இந்த உத்தரவை எதிர்த்து இந்த இரு நிறுவனங்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்றையதினம் நீதிபதிகள் வைத்தியநாதன், விஜயகுமார் உள்ளிட்டோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அந்த சமயத்தில் நாங்கள் நீண்ட காலமாக அந்த இடத்தை அனுபவித்து வருவதன் காரணமாக, நிலத்தை தாங்களே பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை கண்டறிவதற்கு டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும், கட்டுமானம் மேற்கொள்ளும்போது அஸ்திவாரம் போடுவது, தரைதளம் எழுப்புவது, உள்ளிட்ட ஒவ்வொரு கட்டங்களிலும் ஆய்வுகளை நடத்தி கட்டுமானங்கள் விதிகளின்படியும், கட்டிட அனுமதியின் படியும் அமைவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

விதிமீறல்கள் நடைபெற்றிருக்கிறது என்று கண்டறியப்பட்டால் அடுத்தபடியாக கட்டிட அனுமதி வழங்கக்கூடாது, விதிமீறல் கட்டடங்களை சீல் வைத்து பிறப்பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய கூறும் மேல் முறையீடுகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து வைக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தால் அதனை சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பின்பற்றுவது இல்லை என்று அதிருப்தி தெரிவித்து இருக்கிறார்கள்.

அத்துடன் நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தாமல் தங்களுடைய கடமையைச் செய்யத் தவறும் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்புவதுடன் அவர்களுடைய ஐஏஎஸ் பதவிகளையும் பறிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பது என்பது இரண்டாம் பட்சமாக இருக்கவேண்டும், அவர்களை சிறையில் தள்ளுவது முதல்கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இரு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Previous articleபுதிய வகை நோய் தொற்று! முதலமைச்சரின் வேண்டுகோள்!
Next articleபா.ம.கவின் எதிர்காலம் உங்கள் கையில் தான் இருக்கிறது! மருத்துவர் ராமதாஸ் பேச்சு!