ஒவ்வொரு வருடமும் நாம் எந்த ஒரு நாளை வேண்டுமானாலும் தவற விடலாம். ஆனால் இந்த அட்சய திருதியை நாளை மட்டும் தவற விடக்கூடாது. நம்மிடம் இருக்கும் பொருட்கள் அனைத்தும் வளர்ந்துக் கொண்டே போக வேண்டும், செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் இந்த அட்சய திருதியை நாளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வருடா வருடம் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய வளர்பிறை திருதியை திதி தான் அட்சய திருதியை. இந்த நாள் செல்வ செழிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான நாளாகும். “அட்சய” என்பதற்கு ‘அல்ல அல்ல குறையாதது’ என்று அர்த்தம். அட்சய பாத்திரத்தில் இருக்கக்கூடிய எந்த ஒரு பொருளும் தீர்ந்து விடாமல் இருந்து கொண்டே இருக்கும்.
அத்தகைய அட்சய பாத்திரத்திற்கு நிகரான ஒரு நாள் தான் இந்த அட்சய திருதியை. எனவே தான் இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற வழக்கம் இருந்து வருகிறது. அட்சய திருதியை அன்று மகாலட்சுமி தாயை வணங்குவதும் மிகவும் அவசியம். அதேபோன்று மகாவிஷ்ணு மற்றும் லட்சுமி குபேரர் வழிபாடும் மிகவும் அவசியம்.
தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை மற்ற நாட்களில் வாங்குவதை விட அட்சய திருதியை அன்று வாங்கினால் அந்தப் பொருள் மென்மேலும் பெருகும் என்று அர்த்தம். அதேபோன்று தான் அந்த நாளில் செய்யக்கூடிய செயல்கள், பேசக்கூடிய வார்த்தைகள் ஆகிய அனைத்திற்குமே பொருந்தும்.
அட்சய திருதியை அன்று வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை வாங்குவதை காட்டிலும், அன்று பேசக்கூடிய வார்த்தைகளிலும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது மற்றவர்களிடம் கோபமாகவோ, தேவையற்ற வார்த்தைகளையோ பேசுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.
இந்த நாளில் நெகடிவாக பேசுவதையோ, நெகடிவாக யோசிப்பதையோ தவிர்த்துக் கொள்ள வேண்டும். முடிந்த அளவிற்கு அந்த நாள் முழுவதும் நேர்மறை எண்ணத்துடன் செயல்பட முயற்சிக்க வேண்டும். இந்த ஆண்டு இந்த திருதியை திதியானது ஏப்ரல் 29ஆம் தேதி இரவு 8 மணி 49 நிமிடத்திற்கு தொடங்கி, அடுத்த நாள் ஏப்ரல் 30ஆம் தேதி மாலை 6 மணி 41 நிமிடம் வரையிலும் இருக்கிறது.
ஒருவேளை இந்த நாளில் நீங்கள் தங்கம், வெள்ளி வாங்க விரும்பினால் ஏப்ரல் 30ஆம் தேதி மதியம் 2 மணி 12 நிமிடத்திற்குள் வாங்கி விடுவது நல்லது. இந்த திருதியை நாளில் ரோகினி நட்சத்திரமும் சேர்ந்து இருப்பதும் இன்னும் சிறப்பு. இதுபோன்று ஏதேனும் ஒரு வருடம் தான் நடக்கும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாளில் இந்த ஒரு பூவினை வைத்து செய்யக்கூடிய வழிபாட்டு முறையினால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். அதுதான் நமது சமையலறையில் பயன்படுத்தக்கூடிய ஜாதி பத்திரி. இந்தப் பூவானது மிகவும் வாசனை நிறைந்த ஒரு பூவாகும். எனவே இந்த பூவிற்கு மகாலட்சுமி தாயாரின் அனுக்கிரகம் உண்டு.
இந்த பூவினை வைத்து செய்யக்கூடிய தாந்திரீக முறையினை ஆண்கள், பெண்கள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பரிகாரத்தை ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி மதியம் 2 மணி 12 நிமிடத்திற்குள் செய்யலாம். முடியாதவர்கள் மாலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் செய்யலாம்.
பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து, மகாலட்சுமி தாயாரை அலங்காரம் செய்து, உங்களால் முடிந்த நெய்வேத்தியம் ஏதேனும் ஒன்றை செய்து வைத்துக் கொள்ளுங்கள். காமாட்சி அம்மன் விளக்கு, குத்து விளக்கு என இது போன்ற எந்த விளக்கு வேண்டுமானாலும் ஏற்றிக் கொள்ளலாம். ஆனால் அதனுடன் ஒரு மண் அகல் விளக்கையும் ஏற்ற வேண்டும்.
அந்த மண் அகல் விளக்கில் ஜாதி பத்திரி, பச்சைக் கற்பூரம், ஒரு ஏலக்காய் ஆகியவற்றை போட்டுக் கொள்ள வேண்டும். ஏலக்காய் என்பது பணவசியம், தனவசியம் ஆகியவற்றிற்கும், பச்சைக் கற்பூரம் என்பது மகாவிஷ்ணு வாசம் செய்யக்கூடிய ஒரு பொருள், ஜாதி பத்திரி என்பது மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய பொருள் ஆகும்.
மண் அகல் விளக்கில் இந்த மூன்று பொருட்களையும் போட்ட பின்னர், சிறிதளவு நெய் ஊற்றி அந்த பச்சை கற்பூரத்தை பற்ற வைக்க வேண்டும். இது எறிந்த பின்னர் கருப்பு நிற சாம்பல் கிடைக்கும். அந்த பொடியை ஒரு டப்பாவில் சேகரித்து மகாலட்சுமி தாயாரின் பாதத்திற்கு அருகில் வைத்து விட வேண்டும்.
நீங்கள் ஏதேனும் ஒரு முக்கியமான செயலிற்காக வெளியே செல்கிறீர்கள் என்றால், அந்த சமயத்தில் இந்த பொடியை திருநீறு போல உங்கள் நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். இதனை நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். மேலும் எதைத் தொட்டாலும் வெற்றி உண்டாகும்.
இந்தப் பொடி தீர்ந்து விட்டால் அடுத்ததாக வரக்கூடிய வளர்பிறை திருதியை திதி நாட்களில், இதே போன்று செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.