மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே! அதிரடியாக அறிவித்த அரசு!!

Photo of author

By Sakthi

மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே! அதிரடியாக அறிவித்த அரசு!
பள்ளிக் குழந்தைகளின் சுமைகளை குறைப்பதற்கு மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே அதாவது புத்தகப் பையை கொண்டுவராமல் குழந்தைகளை வரவழைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
முன்பு எல்லாம் 5 வயது பூர்த்தியான குழந்தைகள் தான் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அப்பொழுதும் பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளை தலையை சுற்றி காதைத் தொட வைத்து பிறகு தான் வகுப்புகளில் குழந்தைகளை சேர்த்துக் கொள்வர். ஆனால் இன்றைய காலத்தில் 2 அரை வயது ஆகி விட்டாலே மழலையர் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர்.
இந்த குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம், புத்தகப்பை என தொடக்கத்திலேயே சுமை அதிகரிக்கின்றது.  கிலோ கணக்கில் குழந்தைகள் நோட்டு புத்தகங்களை சுமந்து செல்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு நாளடைவில் அதிக பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினரும் பெற்றோர்களும் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மருத்துவர்கள் “பள்ளி மாணவர்களின் முதுகு எலும்பை பாதுகாப்பது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் முதல் கடமையாகும். மாணவர்கள் குழந்தைகள் கொண்டு செல்லும் தோள் பை அதாவது புத்தகப் பையின் எடை அதிகரிப்பதால் தோள் வலி, கழுத்து வலி, முதுகு வலி, முதுகு எலும்பு வளைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தவறான தோள் பைகளை பயன்படுத்துதல் மற்றும் தவறான முறையில் தோள் பைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் இளம் வயதிலேயே முதுகு கூன் விழுதல், சுவாசக் கோளாறு, முதுகு தண்டுவட சவ்வு விலகுதல், போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றது” என்று கூறியுள்ளனர்.
எனவே இந்த பள்ளிக் குழந்தைகளின் புத்தகப் பை சுமையை குறைக்க தெலுங்கானா மாநில அரசு இந்த கல்வியாண்டில் புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. அதாவது மாணவர்களின் புத்தக் பையின் சுமையை குறைப்பதற்கு மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே(No Bag Day) கடை பிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.  அதன்படி இந்த கல்வியாண்டு முதல் மாதத்தில் நான்காவது சனிக் கிழமைகளில் இந்த நோ பேக் டே கடைபிடிக்கப்படவுள்ளது.
இந்த நோ பேக் டே தினத்தில் மாணவர்கள் அனைவரும் புத்தகப் பைகளை கொண்டு வர வேண்டாம். ஆண்டு முழுவதும் மொத்தம் 10 நோ பேக் டே கடைபிடிக்கப்படவுள்ளது. இதன் மூலம் பள்ளிக் குழந்தைகளின் புத்தகப் பை சுமந்து வரும் பிரச்சனை அந்த ஒரு நாளில் தடுக்கப்படும். இது தொடர்பாக தெலுங்கானா மாநிலம் கல்வி காலண்டர் வெளியிட்டது.
அந்த கல்வி காலண்டரில் ஜூன் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை நோ பேக் டே அறிவித்த நாட்களை கோடிட்டு காட்டியுள்ளது. இந்த நோ பேக் டே தினத்தில் மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி, யோகா, தியானம் உள்ளிட்ட வகுப்புகள் எடுக்கப்படவுள்ளதாக தெலுங்கான அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெலுங்கானா மாநில செயலாளர் “இந்த நோ பேக் டே தினத்தில் பள்ளிக் குழந்தைகள் பாடங்களை தவிர மற்ற செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோ பேக் டே தினம் கடைபிடிக்கப்படுவதால் யோகா, விளையாட்டு திறன் பயிற்சி போன்ற வகுப்புகள் மாணவர்களுக்கு எடுக்கப்படும். இதன் மூலம் மாணவர்களுக்கு கற்றல் திறன் மற்றும் பொது அறிவு வளரும்” என்று கூறியுள்ளார்.