தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் செல்வகுமார். இவருடைய மகன் துர்கா இவர் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திடீரென்று அன்றைய தினமே இந்த முடிவு மாற்றியமைக்கப்பட்டது.
அதாவது 17ஆம் தேதிக்கு பதிலாக 20ஆம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஒன்றாக வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், நேற்றைய தினம் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தமிழ் பாடத் தேர்வில் முழு மதிப்பெண் பெற்று காவலர் செல்வகுமாரின் மகள் துர்கா சாதனை படைத்திருக்கிறார். தமிழகத்தில் தமிழ் பாடத்தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற ஒரே மாணவி இவர்தான் என்று சொல்லப்படுகிறது.
இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம்:
தமிழ் 100
ஆங்கிலம் 96
கணிதம் 87
அறிவியல் 79
சமூக அறிவியல் 86
இந்த நிலையில், மாணவி துர்காவை பள்ளி தாளாளர் ராமமூர்த்தி, பள்ளியின் முதல்வர் செல்வி வைஷ்ணவி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், சகமாணவர்கள் என்று எல்லோரும் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.