PMK: 2026 க்கான சட்டமன்ற தேர்தல் மார்ச் மாதம் நடக்க இருக்கும் நிலையில் , இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும், கட்சி தொண்டர்களும் மிக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் முதன்மை கட்சிகளாக அறியப்படும் அதிமுக, திமுக, போன்ற கட்சிகளில் உட்கட்சி விவகாரம் தலைதூக்கியுள்ளது. இது ஒரு புறம் இருக்க பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணிக்கும் ஏற்பட்டுள்ள தலைமை மோதலால் கட்சியின் தலைவர் யார் என்றே தெரியாத நிலை உள்ளது. இதனால் தனது மகன் என்று கூட பாராமல் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் நீக்க, தேர்தல் ஆணையமோ அன்புமணி தான் பாமகவின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் என்று தீர்ப்பளித்தது.
இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றம் செல்ல, அப்போது பேசிய நீதிபதி தேர்தல் நெருங்கும் சமயத்தில் வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற சிக்கல் வரும் என்பதால் பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுவதாகவும், அன்புமணி தான் தலைவர் என்பதை மறுக்க முடியாது என்றும் தீர்ப்பளித்தார். இவ்வாறு பாமகவில் மோதல் போக்கு பெரிதாகி கொண்டே செல்லும் நிலையில், அன்புமணி, ராமதாசின் சம்மதம் இல்லாமல் அதிமுக-பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளார். இதனால் பெரும் அதிருப்தியடைந்த ராமதாஸ் இதனை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் பாமகவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முழு உரிமையும் எனக்கு மட்டுமே உள்ளது. அன்புமணிக்கு இதில் எந்த உரிமையும் இல்லை என கூறியுள்ளார். மேலும், அன்புமணி அதிமுகவுடன் நடத்திய பேச்சுவார்த்தை சட்டவிரோதமானது என்றும், பாமக பெயரை தவறாக பயன்படுத்துவதால் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அன்புமணி அதிமுக கூட்டணியில் சேர்ந்ததை விரும்பாத ராமதாஸ் கூடிய விரைவில் திமுக அல்லது தவெக உடன் கை கோர்ப்பார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.