DMK PMK VSK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருவாயில் பாமக, தேமுதிக, தவெக உடன் யார் கூட்டணி அமைப்பது என்ற போட்டி திராவிட கட்சிகளிடையே தொடங்கியுள்ளது. தவெக அதிமுக உடன் கூட்டணி அமைத்து விட்டது, ஆனால் அது இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்ற தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸை இபிஎஸ் மற்றும் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஆனால் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே கூறப்பட்டது. இந்நிலையில் ராமதாஸ் திமுகவுடன் நெருக்கம் காட்டி வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இவர் திமுகவில் இணைவார் என்று பேசப்பட்டு வந்த சமயத்தில், பாமக கூட்டணியில் இணைவது திமுக தலைமையின் கையில் இல்லை, திருமாவின் கையில் தான் உள்ளது என்று திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
ஏனென்றால் திருமாவளவன் ஒரு முறை, பாமக-பாஜக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என்று கூறியிருந்தார். இதனால் நீண்ட காலமாக திமுகவிலிருக்கும் கட்சியின் எதிர்ப்பை மீறி பாமகவை கூட்டணியில் சேர்க்க முடியாது என்று திமுக கறார் காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் பாமகவை விட்டு வைக்கவும் திமுகவிற்கு மனமில்லை, அதே சமயம் விசிக கூட்டணியிலிருக்க வேண்டும் என்றும் திமுக தலைமை நினைக்கிறது. இதனால் திருமாவளவனை சமாதானபடுத்தும் முயற்சியில் திமுக தலைமையே நேரில் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் திருமாவளவன் தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதாக விசிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.