CONGRESS: வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வழியும் நிலையில், நீர் வெளியேற்றம் தொடங்கப்பட்டுள்ளது.
வானிலை மையத்தின் தகவலின்படி, இந்த பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகம் முழுவதும் இயல்பை விட 59 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. இதன் விளைவாக ஆறுகள், ஏரிகள், குளங்கள் அனைத்திலும் நீர்மட்டம் கடுமையாக உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து நேற்று மாலை முதல் அதிகரித்ததையடுத்து, முதலில் வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
தொடர்ந்து இரவு முழுவதும் பெய்த கனமழையால் நீர்வரத்து மேலும் உயரும் நிலையில், இன்று காலை 500 கனஅடி நீர் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அங்கு நீர் திறக்கப்பட்டதைப் பற்றி தன்னிடம் முன்கூட்டியே தகவல் அளிக்காததை அதிகாரிகளிடம் கடுமையாக விமர்சித்தார். மக்கள் பிரதிநிதியாக நானும், சேர்மனும், அமைச்சரும், எம்.எல்.ஏக்களும் இருக்கிறோம். யாருக்கும் தெரியாம நீங்க திறக்கிறீர்கள். இது அரசுத் துறைக்கு ஏற்ற நடைமுறை அல்ல. ஒரு வார்த்தையாவது சொல்லலாமே. கடந்த வருடமும் இதே மாதிரி நடந்தது.
ஆட்சியாளர்கள் எல்லாவற்றையும் தாமே செய்யப் போனால், மக்கள் பிரதிநிதிகள் தேவையா? இனிமேல் நான் தான் ஊர் ஊரா சென்று மக்களிடம் நீர் திறந்துவிட்டார்கள், பாதுகாப்பாக இருங்கள் என்று சொல்வேன், என அவர் கடுமையாகக் கூறினார். செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அருகிலுள்ள குடியிருப்புகள் மற்றும் பின்பகுதி பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மழை தீவிரம் தொடர்வதால் மேலும் நீர் திறப்பு சாத்தியம் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

