DMK: 2026 சட்டமன்ற தேர்தலிலும் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை தன் வசப்படுத்தி விட வேண்டுமென்று, திமுக தீவிரமாக செயலாற்றி வருகிறது. அதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மக்களை சந்திக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களின் வாக்கு வங்கியால் மட்டுமே வெல்ல முடியும் என்பதை அறிந்த திமுக அவர்களுக்கு இலவச பஸ், நியாய விலை கடைகளில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய், புதுமை பெண் திட்டம் போன்ற சலுகைகளை அளித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்திருக்கிறது.
இதெல்லாம் போதாது என்று நினைத்த திமுக தலைமை, தற்போது 234 தொகுதிகளிலும் பாதியளவு பெண் வேட்பாளர்களை முன்னிறுத்தும் பணியை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அந்தந்த தொகுதியில் யார் மக்கள் செல்வாக்கு மிக்கவர், அனைவராலும் அறியப்பட்டவர் என்ற தகவலை திமுக சேகரித்து வருகிறது. இதன் மூலம் அவர்கள் அந்த தொகுதியின் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள். இந்த வியூகத்தை விஜய் ஏற்கனவே திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் கரூர் சம்பவம் காரணமாக விஜய் மற்றும் தவெக தொண்டர்கள் முடங்கி இருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய திமுக இதற்காக ஒரு குழுவை அமைத்து சரியாக செயல்பட்டு வருவதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் அதிமுக இந்த விஷயத்தில் கோட்டை விட்டு விட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். திமுகவின் வியூகம் நிச்சயம் சட்டமன்ற தேர்தலில் உதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

