பேரறிவாளனின் விடுதலைக்கு எதிர்ப்பு! காங்கிரஸ் கட்சி இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!

Photo of author

By Sakthi

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலிருந்து வந்தனர்.

இந்த நிலையில் பேரறிவாளன் கடந்த மார்ச் மாதத்தில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அதற்கு முன்பாக கடந்த 2014ஆம் ஆண்டு குற்றம் நிரூபிக்கப்படாமல் நான் ஏன் சிறையில் இருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த சூழ்நிலையில், அந்த மனு மீதான விசாரணை அனைத்தும் முடிவற்று சென்ற வாரத்தில் தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, அந்த தீர்ப்பில் மத்திய அரசுக்கும், மாநில ஆளுநருக்கும், கண்டனங்களை தெரிவித்ததோடு பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்.

அவருடைய விடுதலைக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் அரசியல் கட்சிகளும் வெகுவாக வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் காங்கிரஸ் கட்சி மட்டும் அவருடைய இந்த விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைமையை பொருத்தவரையில் காங்கிரஸ் கட்சியின் தலைமையின் கருத்து என்னவென்றால் அவர்கள் தெரியாமல் இழைத்த தவறுக்காக நாங்கள் அவர்களை மன்னித்து விட்டோம் எங்களுக்கு எந்த விதமான கோபமும் அவர்கள்மீது இல்லை முன்பே தெரிவித்திருந்தது.

ஆனால் தற்போது அந்த கட்சியின் மாநிலத் தலைமை பேரறிவாளனின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களை கொலை செய்த கொலையாளிகள் 7 பேரை உச்ச நீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று தெரிவித்து தண்டனை வழங்கியது.

ஆனால் தற்போது உச்ச நீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களை தெரிவித்து பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அதே சமயத்தில் குற்றவாளிகள் கொலை செய்தவர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும், நாங்கள் அழுத்தமாக தெரிவிக்க விரும்புகிறோம் எனக் கூறியிருக்கிறது அந்த கட்சி.

கொலை செய்தவர்கள் தமிழர்கள் அவர்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கிறார்கள் அதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என சிலர் தெரிவித்து வருகிறார்கள். பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலை செய்யப்படாமலிருக்கிறார்கள் என தெரிவித்து இருக்கிறது அந்த கட்சி.

மேலும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல் ஏன் எழவில்லை அவர்களெல்லாம் தமிழர்கள் கிடையாதா? ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் மட்டும்தான் தமிழர்களா? தமிழ் உணர்வு இருப்பவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று அந்த கட்சியின் தலைமை கேள்வி எழுப்பியிருக்கிறது.

அதேபோல நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் இன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக் கொண்டு வன்முறையை எதிர்ப்போம்.

கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது என எழுதிய பதாகையை கையில் பிடித்துக்கொண்டு காலை 10 மணியிலிருந்து 11 மணி வரையில் அறப் போராட்டம் நடத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமையை ஒருபுறம் ராஜீவ் காந்தியின் கொலையாளிகள் என குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர்கள் மீது கோபமில்லை என தெரிவித்து விட்டு மறுபுறம் மாநில தலைமையை தூண்டிவிட்டு போராட்டத்தில் குதிக்க செய்கிறதா? என்ற சந்தேகமும் எழுகிறது.