ADMK BJP: இன்னும் 6 மாதத்தில் நடைபெற போகும் தேர்தலுக்காக இப்போதிலிருந்தே தேர்தல் களம் தயாராகி வருகிறது. இந்த சமயத்தில் அதிமுகவில் தலைமை போட்டியும், பதவி வெறியும் தலைவிரித்தாடுகிறது. அதன் உச்சம் தான் முக்கிய அமைச்சர்களின் நீக்கம் என்றே சொல்லலாம். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆன பிறகு, ஓபிஎஸ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு பின் அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஆரம்பித்த ஓபிஎஸ், அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்றும், மீண்டும் கட்சியில் சேர வேண்டும் என்றும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
ஆனால் அது தற்போது வரை நடைபெறாத காரணத்தினால், டிசம்பர் 15 க்குள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால், வேறு மாதிரியான முடிவுகள் எடுக்கப்படும் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். இந்நிலையில் ஓபிஎஸ் இன்று டெல்லி சென்றிருப்பது, அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இவர் டெல்லி சென்று அமித்ஷாவிடம் சுமார் 20 நிமிடம் பேசியதாக செய்திகள் வெளியானது. இந்த சந்திப்பு எது பற்றி இருக்கும் என்ற விவாதம் எழுந்த நிலையில், தற்போது அது குறித்து ஒரு தகவல் கசிந்துள்ளது.
ஓபிஎஸ் அமித்ஷாவிடம், அதிமுகவில் நான் மீண்டும் இணைய நீங்கள் உதவ வேண்டும் என்றும், அதில் எனக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளாராம். என்ன ஆனாலும் வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாது என்று பிடிவாதமாக இருக்கும் இபிஎஸ் இதனை எப்படி ஏற்றுக் கொள்வார் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது. மேலும், அதிமுகவின் உள் விவகாரங்களில் பாஜக மீண்டும் மீண்டும் தலையிடுவது அதிமுக பாஜகவின் கைப்பாவையாக உள்ளது என்பதை நிரூபித்திருக்கிறது.

