TVK AMMK ADMK: தமிழக அரசியல் அரங்கை அதிர வைக்கும் வகையில் பிரபல நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் கட்சி தொடங்கி சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலான நிலையில் தவெகவிற்கான ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. இதனை தொடர்ந்து மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்ட விஜய்க்கு கரூர் சம்பவம் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. இதனால் சில காலம் முடங்கி இருந்த விஜய் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் மூலம் வெளியே வந்தார்.
கரூர் விபத்து தவெகவின் அரசியல் அறியாமையால் நிகழ்ந்தது, விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை என்னும் கருத்து மேலோங்கி இருக்க, இதனை அடியோடு நசுக்கும் வகையில் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த நபரான செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்த நிலையில் இவர் கட்சியிலிருந்தும், அவரது பதவியிலிருந்தும் அடியோடு நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தவெகவில் இணைந்த இவர் அதிமுக அதிருப்தி அமைச்சர்கள் பலரையும் தவெகவில் சேர்ப்பேன் என்று சபதம் எடுத்திருந்தார்.
இதற்காக அதிமுக அதிருப்தி அமைச்சர்கள் பலருடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் செங்கோட்டையன் தற்போது அரசியல் களத்தை திருப்பி போடும் வகையில் ஒரு செய்தியை கூறியிருக்கிறார். அண்மையில் NDA கூட்டணியிலிருந்து விலகிய ஓபிஎஸ், தினகரனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று விவாதிக்கப்பட்ட சமயத்தில் பொங்கலுக்கு முன்பு இவர்கள் இருவரும் தவெகவில் இணைய இருக்கிறார்கள் என்று கூறிய செங்கோட்டையன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரின் இணைவு தவெகவிற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.