ADMK: இபிஎஸ் முதல்வரான பிறகு அதிமுகவின் முக்கிய முகங்களாக அறியப்பட்ட பலரையும் கட்சியிலிருந்து நீக்க உத்தரவு பிறப்பித்தார். அதில் ஒருவர் தான் ஓபிஎஸ். கட்சியின் சின்னமான இரட்டை இலை இபிஎஸ்க்கு செல்லுமா இல்லை ஓபிஎஸ் அணிக்கு செல்லுமா என்று கேள்வி எழுந்த போது, அது இபிஎஸ்க்கு தான் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் ஓபிஎஸ், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒன்றை தொடங்கினார். இதனை தொடர்ந்து அதிமுக ஒன்றிணைய வேண்டுமென்று பலரும் கூறி வந்த நிலையில் செங்கோட்டையனும் இதனையே கூறினார். இது தொடர்பாக டெல்லி சென்ற செங்கோட்டையன் மத்திய அமைச்சர்கள் சிலரை சந்தித்தார். இவருக்கு பிறகு டெல்லி சென்ற இபிஎஸ் பிரிந்தவர்களை இணைக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.
அடுத்ததாக தமிழக பாஜகவின் தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன் சேலம் வந்திருந்த போது இபிஎஸ் வீட்டிற்கு சென்றார். இவர் என்ன பேசி இருப்பார் என்று கேள்விகள் எழுந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக பேசியதாக கூறினார்.
ஆனால் இவர்களின் சந்திப்பு பற்றி அரசியல் வல்லுனர்களின் கருத்து என்னவென்றால், ஓபிஎஸ்யை மீண்டும் கட்சியில் இணைக்க இருப்பதாகவும், அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்க இருப்பதாகவும், விவாதங்கள் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு இபிஎஸ்யும் ஒப்பு கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இதற்கு ஓபிஎஸ் என்ன பதிலளிப்பார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.