BJP DMK: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக சார்பாக நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து தமிழக அரசு சார்பாக தனிநபர் குழு அமைத்து விசாரிக்கப்பட்டு வந்தது. மேலும் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விபத்திற்கு காரணம் திமுக அரசு தான் என்று தவெக தரப்பு கூறி வந்த நிலையில், இந்த வழக்கை மாநில அரசு விசாரித்தால் உண்மை வெளிவராது என்று கூறிய தவெக சிபிஐ விசாரணையை கேட்டு மனு தாக்கல் செய்தது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திமுக அரசை கடுமையாக சாடினார். போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றிற்கு ஆளுங்கட்சிக்கு ஒரு மாதிரியாகவும், மற்ற கட்சிகளுக்கு ஒரு மாதிரியாகவும் பாதுகாப்பும், நிபந்தனைகளும் விதிக்கப்படுகிறது. இதற்கு உச்ச நீதிமன்றம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரவேற்கதக்கது என்றும் கூறினார். மேலும் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்த 2 பேர் சிபிஐ விசாரணையை கேட்டுள்ள நிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் எந்த பயனும் இல்லையென்று திமுக வழக்கறிஞர் கூறுவது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர் கரூர் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக பாஜக நிற்கும் என்றும், விஜய்யிக்கு நேர்ந்தது போல கொடூரம் திமுக அரசால் இங்கு பல கட்சிகளுக்கு நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக நிற்பதை விட, திமுக அரசுக்கு எதிராக இருக்கிறோம் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.