ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வன்னியர் அறக்கட்டளை சொத்து மீட்பு
தமிழகத்தில் பெரும்பான்மையான சமுதாயமான வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த கொடை வள்ளல்களான முன்னோர்கள் பலரும் தங்களது சொத்துகளை அந்த சமுதாய மக்களின் அறக் காரியங்களுக்காக எழுதி வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக வன்னியர் சமுதாய கொடையாளர்கள் எழுதி வைத்த இந்த சொத்துகளின் பயன்கள் அதற்கு உரியவர்களான வன்னிய சமுதாய மக்களுக்கு கிடைக்காமல் சிதறிக் கிடந்தன.
குறிப்பாக இந்த சொத்துக்களை சம்பந்தமேயில்லாமல் வேறு சமுதாயத்தை சேர்ந்த பலர் ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாடி வந்தனர்.இந்த நிலையில், இவ்வாறு சிதறிக் கிடக்கும் வன்னியர் சொத்துகளை ஒருங்கிணைத்து அதன் பயன்கள் அதற்கு உரியவர்களான வன்னிய சமுதாய மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் வன்னியர் பொது சொத்து நல வாரியத்தை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள வன்னியர் பொது சொத்து நல வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஜி.சந்தானம் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பல்வேறு நபர்களால் முறைகேடாக ஆக்கமிக்கப்பட்டுள்ள வன்னியர் சமுதாய அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கும் பணி தொடங்கியது.
இது வரை வன்னியர் பொது சொத்து நல வாரியத்தின் மூலமாக ஏறக்குறைய 79 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் சென்னையிலுள்ள பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளது குறித்தும் அதை மீட்க கடந்த 2002 ஆம் ஆண்டே முயற்சி செய்து பலனளிக்காமல் போனது குறித்தும் வன்னியர் பொது சொத்து நல வாரியத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வன்னியர் பொது சொத்து நல வாரியத்தின் தலைவர் ஜி.சந்தானம் மற்றும் பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவர் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் முயற்சி மேற்கொண்டு அந்த நிலத்தை மீட்டுள்ளனர். இது போலவே தமிழகம் முழுவதும் வன்னியர் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் மீட்க வேண்டும் என வன்னிய சமுதாய மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.