திமுக நிர்வாகியால் சாதி அடிப்படையில் அவமானபடுத்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவி! பாஜக செய்த அரசியல்
சிதம்பரத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவரால் சாதி அடிப்படையில் அவமானப்படுத்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி பாஜகவில் இணைந்துள்ளார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள தெற்கு திட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருபவர் தான் ராஜேஸ்வரி. இவர் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் பதவி வகிக்கும் இந்த ஊராட்சியில் பெரும்பாலோனோர் மாற்று சமுதாயத்தை சார்ந்தவர்களாக உள்ளனர். குறிப்பாக ஒருவரை தவிர மற்ற வார்டு உறுப்பினர்கள் அனைவரும் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் தான் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாற்றுச் சமூகத்தைச் சார்ந்த மோகன்ராஜன் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி மற்றும் அதே சமூகத்தை சேர்ந்த வார்டு உறுப்பினரான சுகந்தி உள்ளிட்ட இருவரையும் சாதி அடிப்படையில் நடத்தியதாகவும், ஊராட்சி கூட்டங்களில் அவர்கள் நாற்காலியில் அமராமல் தரையில் அமர வேண்டும் எனவும், தேசியக்கொடி ஏற்றக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதே நேரத்தில் ஊராட்சி தலைவர் அமர வேண்டிய நாற்காலியில் தான் அமர்ந்து கொண்டு அந்த ஊராட்சி நிர்வாகத்தையே இவர் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஊராட்சி தலைவரை எந்தப் பணியும் செய்யவிடாமல் தடுத்து சாதி அடிப்படையில் அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இவ்வாறு சாதி வெறியுடன், ஊராட்சி மன்றத் தலைவரை பணி செய்ய விடாமல் தொடர்ந்து இது போன்ற புறக்கணிப்பு செய்து வந்த மாற்றுச்சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி துணை தலைவர் மோகன்ராஜன் திமுக கட்சியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள ஊராட்சி தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அப்போது நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தின் போது ஊராட்சி மன்ற தலைவரான ராஜேஸ்வரியை தரையில் அமர வேண்டும் என ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பான புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. குறிப்பாக பல்வேறு கால கட்டங்களில் திமுக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருப்பது போல காட்டி கொண்டாலும் திமுக நிர்வாகிகளே சாதி பிரிவினையுடன் நடந்து கொண்டது சமீப காலமாக வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
குறிப்பாக திமுக எம்பிகள் சமீபத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் கருத்து கூறி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரும் தற்போது ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிப்பவருமான ராஜேஸ்வரி பாஜகவில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இதுவரை அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த சமூக ஆர்வலர்கள் இவர் பாஜகவில் இணைந்ததையடுத்து எல்லாம் நாடகமா? என்னும் வகையில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
திமுக அரசியல் செல்வாக்கை குறைக்க அதிமுகவை விட பாஜக தீவிரமாக செயல்பட்டு வருவது தற்போதைய அரசியல் நிகழ்வுகளை கவனித்து வருபவர்களுக்கு நன்றாகவே புரியும். அந்த வகையில் போலியான சாதி ஒழிப்பு பேசி வரும் திமுகவிற்கு எதிராக பாஜக எடுத்த நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.சாதி அடிப்படையில் ஒரு பெண் நடத்தப்பட்டது அரசியலமைப்புக்கு அவமானமாக கருதப்பட்டாலும் இதிலும் ஒரு அரசியலா என்று பார்க்கும் போது மக்கள் மனதில் எல்லாம் நாடகமா என்றே சந்தேகம் கிளம்புகிறது.