PMK BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு, அதிமுகவில் ஏற்பட்ட முக்கிய தலைவர்களின் பிரிவு, திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் நால்வர் அணியாக உருவெடுத்தது ஆகியவை தேர்தல் களம் பரபரப்பாக இருப்பதற்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தான் பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. இதனை தொடர்ந்து, ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கியது, இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது போன்ற பல்வேறு விஷயங்கள் அரங்கேறி விட்டன.
இது மட்டுமல்லாமல், தனது மகள் காந்திமதியை செயல் தலைவர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தார் ராமதாஸ். இது அன்புமணிக்கு மேலும் பகையுணர்வை தூண்டியது என்றே சொல்லலாம். இந்த இக்கட்டான நிலையில், கூட்டணி குறித்தும் பாமக தலைகள் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், சுமார் 2 வாரங்களுக்கு முன்பு, பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜந்த் பாண்டா தமிழகம் வருகை புரிந்து, இபிஎஸ்யுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணியுடனும் ஆலோசனை நடத்தியதால், பாமகவின் ஒரு தரப்பு அதிமுக-பாஜக கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து விட்டது என்று அனைவரும் கூறி வந்தனர்.
இந்நிலையில், பைஜந்த் பாண்டா இன்று மீண்டும் தமிழகம் வருகை புரிய போவதாக தகவல் கிடைத்துள்ளது. இவரின் இந்த வருகை பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து கூட்டணி குறித்து விவாதிக்க தான் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றனர். நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக எம்எல்ஏ அருள், அன்புமணியும், ராமதாசும் ஒரே கூட்டணியில் இணையும் வாய்ப்பும் உள்ளது, அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பொடி வைத்து பேசினார். அதனால் தற்போது பைஜந்த் பாண்டாவின் தமிழக வருகை அதனை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர்.

