பங்குனி உத்திரத்தின் போது காவடி தூக்குவதின் ரகசியம் என்ன?

0
216

பங்குனி உத்திர திருவிழா முருகன் ஆலயங்களில் பழனி கோவிலில் மிக சிறப்பாக வருடம் தோறும் நடைபெறும். இந்த விழாவின்போது பழனிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். பழனி முழுவதும் காவடி காட்சிகளாக காட்சிதரும் முருகனுடைய பக்தர்கள் காவடி எடுப்பதற்கு ஒரு புராணகதை தெரிவிக்கப்படுகிறது.

அதாவது, பார்வதிதேவிக்கும், சிவபெருமானுக்கும், திருமணம் நடந்த சமயத்தில் தேவர்களும், முனிவர்களும் மற்றும் அனைவரும் தெய்வீக திருமணத்தை காண கைலாயம் சென்றதாகவும், இதனால் வடபுறம் தாழ்ந்து தென்புறம் உயர்ந்தது என்றும் சொல்லப்படுகிறது. பூமியை சரிசமமாக நிறுத்துவதற்கு சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசைக்கு அனுப்பிவைத்தார் என தெரிவிக்கப்படுகிறது.

அகத்திய முனிவரும் தென்திசையில் பொதிய மலையில் தாங்கிக் கொண்டார். அகத்திய முனிவர் அங்கு இருந்த காலகட்டத்தில் தாம் வழிபட சிவகிரி சக்திகிரி என்று இரு சிகரங்களை கொண்டு வருமாறு தன்னுடைய சீடராகிய இடும்பாசுரனிடம் கட்டளையிட்டதாக சொல்லப்படுகிறது.

இடும்பாசுரன் மிகப்பெரிய பக்திமான் என்று சொல்லப்படுகிறது ஆகவே தன்னுடைய குருவான அகத்தியர் வழங்கிய கட்டளையை நிறைவேற்றுவதற்காக தன்னுடைய மனைவி இடும்பியுடன் கயிலைக்குச் சென்று முருகப் பெருமானுக்கு உகந்த கந்த மலையிலிருக்கின்ற சிவகிரி, சக்தி கிரி என்ற இரு குன்றுகளையும் பெயர்த்தெடுத்து ஒரு பெரிய பிரம தண்டத்தின் 2 புறங்களிலும் காவடியாக கட்டினான் என்று சொல்லப்படுகிறது.

தன்னுடைய தோல் மீது பிரம தண்டத்தின் மையப் பகுதியை வைத்துக்கொண்டு பொதிய மலைக்குத் திரும்பி சென்று கொண்டிருந்த வழியில் திருவாவினன்குடிக்கு மேலே ஆகாயத்தில் பறந்த போது முருகப்பெருமான் அந்த இரு மலைகளையும் அங்கேயே இறங்குமாறு செய்து அந்த இடத்திலேயே நிலைகொள்ள செய்துவிட்டார்.

தன்னையறியாமல் தரையிலிறங்கிய இடும்பன் எவ்வளவு முயற்சி செய்தும் பிரம தண்டத்தின் ஓரங்களில் கட்டிய மலைகளை அசைக்க முடியாமல் திகைத்து நின்றான்.
மறுபடியும் அந்த காவடியைத் தூக்க முயற்சி செய்தபோது சிறியக்குன்றின்மீது ஒரு அழகிய சிறுவன் கோவணத்துடன் ஆண்டியின் உருவில் சிரித்துக்கொண்டு நிற்பதைக் கண்டான் இடும்பாசுரன்.

அந்த சிறுவன் காரணமாகத்தான் மலையை அசைக்க கூட முடியவில்லை என்று நினைத்த இடும்பாசுரன் அந்த சிறுவனை மலையிலிருந்து இறங்கும்படி கட்டளையிட்டான். அந்த சிறுவனும் மலை தனக்கு சொந்தம் என்று வாதிட்டான் கோபமுற்ற இடும்பாசுரன் அச்சிறுவனைத் தாக்க முயற்சி செய்தான்.

தாக்குவதற்காக வந்த இடும்பாசுரன் வேரற்ற மரம் போல சாய்ந்து விட அவனுடைய மனைவி இடும்பி கணவனை காப்பாற்றுவதற்காக சிறுவனை வேண்டினாள். தன்னுடைய தவ வலிமை காரணமாக, நிகழ்ந்தவற்றை அறிந்த அகத்தியர் முருகப் பெருமானை வணங்கினார்.

அந்தக்கணமே இடும்பாசுரன் உயிர் பெற்று எழுந்து முருகப் பெருமானின் திருவிளையாடல் என்றறிந்து மூவரும் முருகப் பெருமானை வணங்கி பக்தியுடன் துதித்தார்கள். குரு பக்தியை மெச்சிய முருகப்பெருமான் இடும்பனை பழனித் தலத்தின் காவல் தெய்வமாக இருக்குமாறு அருள் செய்தார்.

இரு மலைகளையும் காவடி போல தூக்கி வந்த இடும்பாசுரன் முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றதை போல இன்றும் பக்தர்கள் காவடி தூக்கி சென்று முருகப் பெருமானின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.இளவரசனாக முருகப் பெருமான் இடும்பனுக்கு காட்சியளித்ததால் இன்றும் பழனி முருகனுக்கு ராஜா அலங்காரம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

Previous articleஇன்று இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்!
Next articleதெற்கு ரயில்வேயில் வேலை செய்ய விருப்பமா? உடனடியாக விண்ணப்பியுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here