ADMK: தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் பெங்களூரு புகழேந்தி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து முக்கிய கருத்துக்களை வெளியிட்டார். அதிமுகவிலிருந்து புகழேந்தி பிரிந்ததிலிருந்தே எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருவதோடு, அவரது தலைமையிலான கூட்டணி தோல்வியடையும் என்றும் கூறி வருகிறார். இந்நிலையில் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் அல்லது மோசமான வழக்குகள் உள்ளவர்களுடன் விஜய் கூட்டணி வைக்க மாட்டார்.
விஜய் யாரிடமும் பேசவில்லை, யாருக்கும் ஆதரவு அளிக்கவும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் அவர் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களை விஜய் நேரில் சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் கூறினார். எந்த ஒரு கட்சியும் உட்கட்சிப் பிரச்சினையைத் தீர்த்து, ஒற்றுமையுடன் செயல்படாவிட்டால் வெற்றி பெற முடியாது. எல்லோரையும் சேர்த்து செல்லும் மனப்பக்குவம் இல்லாத எடப்பாடி பழனிசாமி, உதயகுமார் போன்றோர் அரசியலில் பெரிய தோல்வியைச் சந்திக்க போகிறார்கள்.
2026 தேர்தலில் எடப்பாடி வேட்பாளர்களை தேடி அலைவார் என நான் உறுதியாகச் சொல்கிறேன் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், விஜய், எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொண்டதாக கூறவில்லை. விஜய் எடப்பாடியுடன் சேர்ந்தால் அவர் அரசியல் அரங்கில் காணாமல் போய்விடுவார். விஜய் எடப்பாடியுடன் கூட்டணி வைப்பார் என கனவில் கூட நினைக்க வேண்டாம் என்று கூறினார். மேலும் பெங்களூரு புகழேந்தியின் இந்தப் பேச்சு, அதிமுக-விஜய் கூட்டணி குறித்து நிலவி வரும் ஊகங்களுக்கு வலுவான பதிலாக இருக்கிறது.

