மக்களே வெளியில் போகும்போது இதை கையோடு கொண்டு போங்க! இல்லனா சிக்கல்தான்!

Photo of author

By Sakthi

நீலகிரி கோயமுத்தூர் 18 மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, வட உள் தமிழகத்தில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம். திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஒரு பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விரிஞ்சிபுரம் பகுதியில் 15 சென்டிமீட்டர் மழையும், சங்கரிதுர்க் பகுதியில் 13 சென்டிமீட்டர் மழையும், ஜமுனாமரத்தூர் பகுதியில் 10 சென்டி மீட்டர் மழையும், பதிவாகியிருக்கிறது.

இந்த நிலையில், இன்று தென் கிழக்கு அரபிக்கடலில், லட்சத்தீவு, மாலத்தீவு, கர்நாடகா, கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் கடலோரப் பகுதிகளில் மன்னார் வளைகுடா கடல் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதி, அதோடு தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்ட தினங்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.